Tuesday, November 25, 2014

KaniBlog: உலகறியும் நாள் தொலைவில் இல்லை!!

KaniBlog: உலகறியும் நாள் தொலைவில் இல்லை!!

உலகறியும் நாள் தொலைவில் இல்லை!!

ஈழத்து மண்
ஈன்ற வீரம்
சிங்கள வெறியின்
சிரம் அறுத்த ஆற்றல்
வேங்கையின் பாய்ச்சலில்
விடுதலை பறை கொண்டு
இயற்கையின் புதல்வனாய்
அடிமை விலங்கொடிக்க
தமிழினத்தின் புகழ் மீட்க
தரணியில் பிறந்தவன் நீ!!
முப்படை நிறுவினாய்
தற்கொலைப்படை படைத்தாய்
தமிழ்மண்ணை மீட்டெடுக்க!
செஞ்சோலை அமைத்தாய்
செம்மொட்டுக்களுக்காக!!
எதிரிப் படை நடுங்கியது
உன்னெதிரில்;
உன் போர்முறை கண்டு
 சிதறி ஓடியது;
எதிர் நின்று வீழ்த்த முடியாத
உன் வீரத்தை
வஞ்சகக் கூட்டம்
வஞ்சித்து வீழ்த்தியது!!
வீழ்த்தப்பட்ட வீரம்
மாண்டுவிடவில்லை
மீண்டெழும் ஈழத்தை மீட்க
என உலகறியும் நாள்
தொலைவில் இல்லை!!






Monday, July 28, 2014

திராவிடத்தால் வாழ்ந்தோம்!!

சில பதர்கள் உரைத்திடும்
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று
உரக்க உரைத்திடு  அவர்களிடம்
திராவிடம் வீழ்த்தியது ஆரியத்தை
திராவிடம் ஒழித்தது சாதியத்தை
திராவிடம்  கொடுத்தது கல்வியை
திராவிடம் வளர்த்தது தமிழை
திராவிடம் போற்றியது பெண்ணியத்தை
திராவிடம் தூண்டியது சிந்தனையை
திராவிடம் தகர்த்தது அறியாமையை
திராவிடம் ஊட்டியது தன்மானத்தை
திராவிடம் அடையாளம் காட்டியது
தமிழனை தமிழனுக்கே!!
சவக்குழியில் புதைந்த
தமிழையும் தமிழனையும்
மீட்டெடுத்து உயிர்கொடுத்தது
திராவிடம் திராவிடம் திராவிடம்!!!






Wednesday, July 23, 2014

கோயில் கருவறை நுழைவுப் போராட்டம்

நாத்திகர்கள் ஏன் கருவறை நுழைதலைப் பற்றி பேச வேண்டும் என்று கேட்பவர்கள் உண்டு... அதே போன்று ஏன் இந்து மதத்தை மட்டும் அதிகமாக விமர்சிக்கின்றோம் என்று கேட்பவர்கள் உண்டு...
கடவுள் இல்லை என்பது தான் எங்களின் கொள்கை ...ஆனால் என் சக தமிழன் கடவுள் நம்பிக்கை கொண்டிருக்கும்போது அவனுக்கு கருவறைக்குள் அனுமதி இல்லை அவன் சூத்திரன் என்று சொல்லும்போது எங்களுக்கும் சேர்த்துதான் அந்த இழிவு...
ஒரு காலத்தில் பேருந்துகளில் இருந்த சாதி,திரையரங்குகளில் இருந்த சாதி,வக்கில் சங்கங்களில் தனி தண்ணீர்ப்பானையாக இருந்த சாதி தந்தை பெரியாரின் உழைப்பால் அனைத்து இடங்களிலும் இருந்து விரட்டி அடிக்கப்பட்டது... ஆனால் சாதி இன்றும் இரண்டு இடங்களில் பாதுகாக்கப்படுகின்றது... ஒன்று  சரத் 372 ன் படி  சட்டப்படி நாம் இன்றும் சூத்திரரே ...         

சாதி பாதுகாக்கப்படும் மற்றொரு இடம் கோயில் கருவறை... 
சூத்திரன் என்றால் யார் என்றால்  மனுதர்மம் இவ்வாறு கூறுகின்றது.

சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்.

1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்

2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்

3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்

4) விபச்சாரி மகன்

5) விலைக்கு வாங்கப்பட்டவன்

6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்

7) தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415) 

எனவே தான் தந்தை பெரியார் சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்றார்...

எனவே தான் கோயில் கருவறை நுழைவுப் போராட்டம் வலியுறுத்தப்படுகின்றது... 

Saturday, January 4, 2014

அம்மா உனக்கு இருக்கின்றேன்...

என் மகன் இலக்கணன் அழுது கொண்டே இருந்தான் அவனுக்காக எழுதியது


அம்மா உனக்கு இருக்கின்றேன்
'ஆ' என்று அழாதே
இலக்கணா என் மகனே
'ஈ' என்றே சிரித்திடு
உழைப்பே என்றும் உன்னதம் - அதற்கு
ஊட்டச்சத்து மிக அவசியம்
எண்ணம் நன்றாய் இருந்திட்டால்
ஏற்றம் உண்டு உனக்கு
ஐயம் வேண்டாம் என் சொல்லில்
ஒன்றே மாந்தர் யாவரும்
ஓங்கி எழுந்தே உரைத்திடு
ஒளவையின் ஆத்திச்சூடி
எ. .கு உள்ளம் கொண்டிடு