Thursday, July 14, 2016

கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் ...

அண்மையில் நியூ ஜெர்சியில் நடைபெற்ற பெட்னா (fetna )வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நடத்திய கவி அரங்கத்தில் நான் வாசித்த கவிதை (July 2,2016)

கானகத்தில் மனிதன் 
கால் சுவடகள் பதிக்க  
கடித் தமிழகமோ 
அரிச்சுவடி தொடங்கியிருந்தது

பூந்தமிழ் கூறும்  
பண்பும் , இலக்கியமும் 
நம்  சமூகத்தின் 
வாழ்வியலை உலகிற்கு 
உணர்த்தும் முழக்கு  

தமிழின் தொன்மை 
அறிவோம் 
தமிழின் இனிமை 
தெரிவோம் 

தமிழ் எனின் அமிழ்தாம் 
என்பர் கவி வரைவோர் 
அமிழ்தினை சுவைத்தார் 
அவணியில் உண்டோ ?
கவின் கூட்டும் உவமை தான் 
கவியில், கற்பனை மெருகூட்டும் 
 மறுத்தேன் இல்லை 
கற்பனையும் 
ஐம்புலனுக்கு ஐயமின்றி 
இருத்தலே நலம் அன்றோ?

 
மறைக்கதவு திறந்திட 
செய்திட்ட தமிழே, மொழியே, அமுதே 
என்று பாடிடுவார் 
மனம் மகிழ்ந்திடுவார் 
பக்தி மணம் பரப்பிடுவார் 
கோயிலில் 
நீச மொழி என்றே 
ஒரு காத தூரம் ஓடிடுவார் ...

எண்புகள் கொண்டு உயிரை 
மீட்டெடுத்த கதை இனிக்கும் 
வரலாறோ எண்பும் சதையும் 
சிதையும் குண்டு மழையில் 
மொழி தமிழ் ஆனதால் 
எனும் உண்மை மறுக்கும்  

மெய்யாய் அவனியில் 
தழைத்தோங்கும் 
தமிழின் தலைமை 
வரலாறறியும்
சிங்கப்பூரில் தமிழ் 
ஆட்சி மொழியாம் 
நமக்கோ 'தமிழ்'நாடு 
என்ற பெயரே மிச்சம் !!

தமிழ்ப் பிள்ளைகளின் 
பெயர்கள் ஒலிக்க 
கேட்டால் 
பெயரில் 'தமிழ் 'இல்லை 
மதங்கள் மட்டுமே !!

தமிழ் கற்றிட 
பிழையின்றி எழுதிட 
தமிழனுக்குத் 
திராணியில்லை 
இந்தி படிக்காது 
ஒரு தலைமுறையே பாழ் 
என்ற  உளறலுக்கு பஞ்சமில்லை 

செத்த மொழியில் விஞ்ஞானம் 
எனப்  பூரிப்போர் 
 தாய் மொழி கற்றலே 
சமூகஉயிர்ப்பின் விஞ்ஞானம் 
என அறியாத மங்குனிகள் !!

உணவைத் திணித்தால் 
துப்புவது உயிர்க்காக்கும் 
மொழியும் அவ்வாறே 
மரித்த மொழியெல்லாம்
அரியணை 
ஏறிடத் துடித்திட்டால் 
சவுக்கடி கொடுப்பது ஒன்றே 
சரியாமாம் !!

நுனிநாக்கு ஆங்கிலம் அந்தக் காலம் 
தமிழும் நுனிநாக்கில் 
அல்லல்படுது இந்தக் காலம் 
கசடதபற 
ஙஞணநமன 
யரலவழள  
எல்லாமே தகதிமி தகதிமி தான் 
தொலைக்காட்சியில் ஒற்றுப்பிழையையும் 
திரைப்பாடல்களில் உச்சரிப்பு கொலையையும் 
but -ஆனா இம்சைகளையும் 
தட்டிக் கேட்பாரில்லை 
செவ்வியல் மொழிதனை 
சவக்குழிக்குள் புதைக்கவே 
இங்கே அட்டியில்லை 

மொழியின் அழிவு 
அம்மக்களின் அழிவன்றோ?
அம்மொழி இயம்பும் 
பண்பாட்டின் அழிவன்றோ?

சீர்மிகு வாழ்வு வாழ்ந்தோம் 
சீறிவந்த பகை முடித்தோம் 
என மிடுக்காய் நுவல்கின்றோம் 
தமிழினம் கெடுத்த 
பங்காளிச் சண்டையினை; 
பின் சேரனும் , சோழனும் , பாண்டியனும் 
பகையாமோ?

ஆயிரம் உட்பகை கொண்டு 
சமயம் கொண்டு 
ஜாதி கொண்டு 
உயிர்ப்பலிக் கொன்றோம் 

 செம்புலப் பெயல் நீர் போல,
 அன்புடை நெஞ்சம்  தாம் கலந்தனவே!
 என்ற குறுந்தொகையின் காதல் அன்று ;
இன்றோ காதல்  
 ஒடுக்கப்பட்டோன் தலைவாங்கும் ;
 திவ்யாக்களும் , கவுசல்யாக்களும்  
 பிறப்பொக்கும் எனும் மடிந்த  தத்துவத்தின் 
 மெய்யாய் நின்றிடும் சாட்சிகள் !!
 பெருமாள் முருகன்களும், 
 துரை குணாக்களும் 
 சாதீயில் 
 சிதைந்து போன எழுத்தாற்றலின் 
 மானுதல்  !!

கெடல் எங்கே தமிழின்  நலம் 
அங்கெல்லாம் 
தமிழினத்தின் நலமும் கெடல் 
ஜாதியும் 
சமயமும் 
பிறமொழி நாட்டமும் 
கடிகையாய் 
சுழலும் வரை 
சமத்துவம் ஏது ?
சகோதரத்துவம் ஏது?
தமிழின் மேன்மை'ஏது?


கெடல் எங்கே தமிழின் நலம் 
அங்கெல்லாம் புறப்பட்டு 
இளஞ்சிங்கங்காள் ;
 வஞ்சனை விரட்டு ,
தமிழர் பகைதனை முடித்து ;
 உயர்நீதிகள்  உண்டு தமிழில் 
 உயர் நீதிமன்றத்தில் தான் 
 தமிழே இல்லை 
தட்டிக் கொண்டே இருந்தால் 
கதவுகள் திறக்காது 
தகர்த்துப் போடு!!
தமிழை அரியணை ஏற்று ;

கெடலின் காரணிகளை 
களம் கண்டு களை பிடுங்க 
தழைக்கும் தமிழின் நலம் 
சிறக்கும் தமிழர் வாழ்வு 
தாமதித்தால் 
சாம்பலாகக் கூட 
எஞ்சாது தமிழும் - தமிழினமும் !!