http://siragu.com/?p=19759
மெய்யாய் பொய்யாய்
மேதினியில் மனிதர் வாழ்வு
ஓடிக் கொண்டிருக்கும் …
மெய்யை உழைப்பாய்
ஒரு உயிர் தந்து கொண்டிருக்கும்…
இருட்டின் விளிம்பில்
இருண்டு போகும் வாழ்க்கை …
எனினும் மருட்சியில் மாளாது
துணிந்து தூய மனம் போராடும்;
தன்னை சதையாய் எண்ணிச்
சிதைத்து உண்டவனெல்லாம்
தரணியில் தயக்கமின்றி
மெய்யனாய் உலவுகின்றான்
பசிக்கு உடல்தனை புசிக்க
தந்தவள் நாய் தீண்டா
தரித்திர பிண்டமாம் !!
பசி எனச் சொன்னவளின்
உணவுக்கு வழி சொல்லாது
படுக்கைக்கு வழி காட்டிய
கயவனெல்லாம்
யோக்கிய கனவான்களாம்
பெண்ணை காமத்துக்காய்
கடித்து துப்பியவனெல்லாம்
மானம் போயின் உயிர் துற
என்றே பெண்ணுக்கு இலக்கணம்
செப்பிடும் முரணே இங்கு விந்தை !!
வழி தெரியா வேளை
பசி, பிணி, கண்டும்
உதவாச் சமூகத்தின்
காமத்தின் தேடலுக்கு
வடிகாலாய் வாழ்ந்து
உயிர் நொந்து
உடல் தேயும்
பெண்
அவள்
அவிசாரி
விபச்சாரி
எனின்
காம வெறி கொண்டு
அலையும்
ஆண் அவன்
யார் என்றே
ஆண்டாண்டுகளாய்
உரக்க கேட்கின்றோம்
பதில் மட்டும்
இல்லை …!!??
No comments:
Post a Comment