அண்ணா!! நீ உறங்குகின்றாய் அலை கடல் ஓரம்!!
இங்கு தமிழகத்திலும் ஒவ்வொரு தமிழின உணர்வாளரின் நெஞ்சங்களிலும் ஓயா எண்ண அலைகள் !! எதைப்பற்றி என்றே கேட்கின்றாயோ??
' எந்த சிங்களம் சீறிப் போரிட்ட தமிழர்கள் முன் ஒரு காலத்தில் மண்டியிட்டதோ ? எந்தச் சிங்களவர் போரில் தோற்றதால் அக்கால முறைப்படி அடிமைகளாக்கப்பட்டு காவேரிக்கு கரை அமைக்கும் பணியினில் ஈடுபடுத்தபட்டார்களோ அந்தச் சிங்களவன் காண எம் தமிழர்களின் பிணங்கள் கரை ஒதுங்குகின்றனவே'
என்ற வேதனை குரலை வெளிப்படுத்தினாயே அன்று - அந்த சோகம் இன்று பன்மடங்காய் உயர்ந்து எம் தமிழரின் வாழ்வை - தொப்புள் கொடி உறவுகளை எம்மின பிஞ்சு மழலைகளை சிங்கள இனம் தன் இரத்த வெறி இனவெறி தீராமல் இன்றும் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றது அண்ணா!!
ஆனால் இங்குள்ள சில அரசியல்வாதிகளோ தமிழின மக்களின் பிணங்களின் மீது நாற்காலி போட்டு நாடாள நினைக்கின்றார்!!
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ' ஆனால் தமிழகத்து அரசியலில் தனித் தீவாய் ஒவ்வொருவரும் நின்று எதைச் சாதிக்க போகின்றோம்?
'நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த உணர்வற்ற ஈன தமிழர்களை பார்த்திடும் போது!!
என்று தீரும் ஈழச் சிக்கல்? என்று கிடைக்கும் தமிழினத்திற்கு நீதி? என்று மடியும் சிங்கள இனவெறி?
பதில் இல்லா கேள்விகளாய் இவை...
இது உன்னுடைய நூற்றாண்டு ... உன் நூற்றாண்டிலாவது எம்மின மக்களின் உரிமை வென்றெடுக்கப்படுமா அண்ணா?
உன் தம்பிகள் சிலர் மௌனம் சாதிப்பது எங்களின் உயிரனை அழுத்துகின்றது!!
ஏன் இந்த மௌனம் ? புறப்படுங்கள் தமிழர்களே- ஈழ மக்களோடு போராட புறப்படுங்கள்...
எல்லைகள் தான் தொல்லைகள் என்றால்
தேசியம் தான் தடுக்கின்றது என்றால்
அந்த விலங்கினை அடித்து நொறுக்கிவிட்டு நம்மின மக்களின் வழிந்தோடும் குருதியினை நிறுத்திட புறப்படுங்கள் என்று வழி நடத்த உன் தம்பிகள் யாரும் முன் வரவில்லையே அண்ணா!!??
'பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு'
என்றே ஓங்கி குரல் கொடுத்து எவனடா எம்மினத்தை அழிக்க துணிந்தது இதோ வருகிறோம் உங்கள் எலும்பினை முறித்திட என்றே கூறிடவும் நாதி இல்லை அண்ணா!!
ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டுத் தமிழர்களும் அகதிகள் ஆனோம்!!
தமிழினமே பொறுத்தது போதும், பொங்கிடு!! இதோ என் உயிராயுதம் என்றே வீரமரணம் அடந்தான் உன் வீரத் தமிழ் பேரன் ஒருவன்!!
தமிழகத்தில் உணர்வினை ஊட்டிடவும் ஓர் தமிழனின் உயிர் ஆயுதமாக தேவைப்படுகிறது எனின் இந்த அவல நிலையை
என்னவென்று சொல்வது அண்ணா!!??
போதும் !போதும் புகழோடு வாழ்ந்த தமிழினம் இன்று பூண்டோடு அழிவது காண சகியவில்லை மனம் அண்ணா!!
குமறுகின்றது நெஞ்சம் !! எனின் ஏதும் செய்ய முடியா நிலையில் நடைப்பிணங்களாய் நாங்கள்!!
வரலாறு மன்னிக்குமா அண்ணா?? நம்மினம் அழிவதை கண் எதிரே பார்த்தும் ஒன்றும் செய்ய இயலா தமிழினம் என்று தானே காரி உமிழ்ந்திடும்??
அந்த பழி எத்துனை யுகங்கள் வரினும் மாறாத பழிச்சொல்லாய் பதிந்து விடுமே??
சொல்லுங்கள் அண்ணா!! உன் சிலைக்கு மாலை அணிவிப்பதால் மட்டும் உன் கனவினை நிறைவேற்றினவர்கள் ஆவோமோ??
நீ விரும்பியபடி புகழோடும் வாழ முடியாமல், புலியாய் போராடுகின்ற ஈழச் சகோதரர்களின் கைகளுக்கும் வலு சேர்க்க முடியாமல், வெறும் எழுத்தினாலும், பேச்சினாலும் எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திடும் ஈனத் தமிழினமாய் இன்று எங்கள் நிலை!!
மனதினில் பாரம் அழுத்துகின்றது அண்ணா!!
எம்மினம் படும் துன்பத்திற்கு கண்ணீர்த்துளிகளை மட்டுமே தந்திட முடிகின்றது எம்மால்!!
என்று விடியும் அண்ணா??