Wednesday, July 31, 2013

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

நேற்று அறிஞர் அண்ணாவின் நீதிபதி வக்கீலாகிறார் மற்றும் மேலதிகாரி என்ற சிறுகதைகளைப் படித்தேன் ... அண்ணாவின் எழுத்தாற்றலை நான் சொல்ல வேண்டியதில்லை .. அழகான நடை... அதைவிட ஆழமான கருத்துகள். முடிந்தால் தோழர்கள் படிக்கவும். குறிப்பாக மேலதிகாரி என்ற சிறுகதை இன்றைக்கும் பார்ப்பன புத்தியோடு பொருந்தும்.

Sunday, July 28, 2013

கவிதை!!

எழுதத்தான்
நினைக்கின்றேன்
எதைப்பற்றி எழுத
என்றே வியக்கின்றேன்
வியப்பினையும்
விடுகதையையும்
விநாடிப்பொழுதில்
கவிதையாய்  புனைந்திட
வார்த்தைகளை கோர்க்கின்றேன் ...
 கவிதை
சரமாய் ,
சாரலாய் ,
சினமாய் ,
காதலாய் ,
வரிக்கப்படும்
எனினும்
கனப்பொழுதில்
ஆழ்துளையிட்டு
ஆணிவேராய்
ஆட்கொள்ளும்
வரிகளாய்
மலரும் எதுவும்
கவிதையே !!

Tuesday, July 23, 2013

நீ வளர வேண்டும் தமிழைப்போல !!

என் உயிர் சுமந்த ஓவியமே
கவின்  கொண்ட இதழ்களால்
எனை அம்மா என்றே
அழைத்திடும் அமுதே !

உன் சிறு  கரு விழிகள்
வண்டின் வடிவங்கள்
உன் மழலைச்சிரிப்பில்
ஒலி  மத்தாப்புகளின் சிதறல்கள் !

உன் சிறு பாதங்களின் மென்மை
உன் கைவிரல்களின் தொடுதல்
உன் உமிழ்நீரின் வாசம்
தாய்மையின் உச்சம் !!

என் மடி விளையாடும் கனியே
தவழ்ந்து வரும்  நல் முத்தே ;
விலையில்லா இரத்தினமே ;
நீ வளர வேண்டும் தமிழைப்போல !!

தமிழினத்தின் விடிவெள்ளியாய்
திசை எங்கும் ஒளி பரப்பிட
நான்  சுமந்த நெருப்புப்  பொறியே
திரவிடத்தந்தையின் விழுதே !

தாய் மானம் பெரிது -அதனினும்
தமிழினத்தின் மானம் பெரிது
என்றே தாலாட்டினேன்!

என் தாலாட்டு பின் நாளில்
தமிழ் மறவனின் பறையாய்
உன் உருவில் ஒலிக்கட்டும்

மலர் மொட்டாய் உறங்குகின்றாய்
நீ கண் மலர்ந்து காணும் நொடியில்
தமிழ்ப்பகை தூளாகும் !!
உனைச்  சுமந்த கருவறையும் உனை வாழ்த்தும் !!