Monday, February 26, 2007

காதல் பற்றிப் பேசுகிறார் தந்தை பெரியார்...

காதல் பற்றிப் பேசுகிறார் தந்தை பெரியார்...

இன்றைய தினம் காதலைப் பற்றிப் பேசுகிறவர்கள், அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு; காதல் வேறு என்றும், அது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்துக்காக ஏற்படுவதாகும் என்றும், அதுவும் இருவருக்கும் இயற்கையாக உண்டாகக் கூடியதாகும் என்றும், அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமில்லை என்றும், அதுவும் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும் என்றும், அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டுவிட்டால், பிறகு எந்தக் காரணங்கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது என்றும், பிறகு வேறொருவரிடம் காதல் ஏற்பட்டுவிட்டால், அது காதலாயிருக்க முடியாது; அதை விபசாரமென்றுதான் சொல்ல வேண்டுமே ஒழிய, அது ஒருக்காலும் காதலாகாது என்றும், ஒரு இடத்தில் உண்மைக்காதல் ஏற்பட்டுவிட்டால், பிறகு யாரிடமும் காமமோ விரகமோ மோகமோ ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றன.அழகைக்கொண்டோ, பருவத்தைக்கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக்கொண்டோ, கல்வியைக்கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக்கொண்டோ, பெற்றோர் பெருமையைக்கொண்டோ, தனது போக யோக்கியத்துக்குப் பயன்படுவதைக்கொண்டோ அல்லது மற்ற ஏதோவொரு திருப்தியையோ அல்லது தனக்குத் தேவையான காரியத்தையோ, குணத்தையோகொண்டோ தான் யாரும் எந்தப் பெண்ணிடமும், ஆணிடமும் காதல் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும்போது அவன் அறிந்தது உண்மையாகவும் இருக்கலாம்; அல்லது, அங்கிருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டிருந்தாலும் இருக்கலாம்; அல்லது, வேஷமாத்திரத்தால் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலும் இருக்கலாம். ஆகவே ஆசையைவிட, அன்பை விட, நட்பைவிட, காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும், அந்த அன்பு, ஆசை, நட்பு ஆகியவைகூட மக்களுக்கு அறிணைப் பொருள்கள் இடத்திலும், மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவது போல்தானே ஒழிய, வேறில்லையென்றும், அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்துகொள்வதிலிருந்து, நடவடிக் கையிலிருந்து, யோக்கியதையிலிருந்து, மனப்பான்மையிலிருந்து, தேவையிலிருந்து, ஆசையிலிருந்து உண்டாவதென்றும், அவ்வறிவும் நடவடிக்கையும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக்கூடிய தென்றும், அப்படி மாறும்போது அன்பும் நட்பும் மாற வேண்டியதுதான் என்றும், மாறக்கூடியதுதான் என்றும் நாம் கருதுகின்றோம்.

ஆகவே, இதிலிருந்து நாம் யாரிடமும் அன்பும் ஆசையும் நட்பும் பொருளாகக்கொண்ட காதல் கூடாதென்றோ, அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் அன்பும், ஆசையும் நட்பும் மற்றும் எதுவானாலும், மன இன்பத்துக்கும் திருப்திக்குமேயொழிய மனத்துக்குத் திருப்தியும் இன்பமும் இல்லாமல், அன்பும் ஆசையும் நட்பும் இருப்பதாகக் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக்காட்டு வதற்காகவே இதை எழுதுகிறோம்.

No comments: