Wednesday, February 13, 2008

பாதை மாறாமல்...

உயிரே!!
என் இதயத்தை துளைத்து
உட்புகுந்தாய்,
உட்புகுந்ததால்
என் உணர்வானாய்
எனை மீண்டும் பிறப்பித்தாய்!!
ஓடும் என் உதிரத்தில்,
இதயத்துடிப்பில் ,
என் சுவாசக்காற்றில்,
இரண்டறக் கலந்தாய்!!
என் வாழ்வின் பாதையாய்
என்னுடன் பயணித்தாய்!!
நம் பயணங்கள் முடியலாம்
நம் காதலும், பாசமும்
பாதை மாறாமல்
என்றுமே தொடரும்!!

உழைப்பு!!

வாழ்வின் கசப்பு
தீர்க்கும் உழைப்பு
முதலில் துவர்ப்பு
பின்பு வாழ்வே இனிப்பு
அதுதான் உழைப்பு
தரும் சிறப்பு!!
உடல் உழைப்பு தரும்
வியர்வை , கரிப்பு!! -ஆனால்
வாழ்வில் அது தரும் மதிப்பு
விடுத்திடு சலிப்பு,
அல்லும் பகலும் ஏற்றிடு உழைப்பு
அதுவே வாழ்வின் துடிப்பு!!
சோம்பலுக்கு கொடு விடுப்பு
பின் வாழ்வில் முன்னேற ஏது தடுப்பு?
உழைப்பு தரும் சிறப்பு,
அதுவே உலக நடப்பு!
இன்றே கொண்டிடு
சுறுசுறுப்பு பின்
வாழ்வில் என்றுமே
கலகலப்பு!!

காதலர் தின பரிசு

நீ கடல் தாண்டி இருந்து
அனுப்பும் மலர் கொத்துகளை
ஆசையாய் நுகர்ந்து பார்த்தேன்,
மலரின் வாசத்திற்காக அல்ல
உன் மூச்சின் வாசத்திற்காக!!
உன் அன்பின் வாசத்திற்காக!!

பதில்...??

பத்து மாதம் நான்
கொடுத்த வலியால்தானா
பிறந்ததும் தாய்ப்பாலுக்கு
பதில் கள்ளிப்பால் எனக்கு?

உனை என்னுள் ...

நாம் ஒன்றாய் இருந்த
நொடிகளை நினைவென்னும்
நூலில் கோர்த்துள்ளேன்….
உன் முத்துச் சிரிப்பு
உன் காந்த பார்வை
உன் சிவந்த வெட்கம்
உன் குறும்பு பேச்சு
உன் கொலுசின் ஒலி
உன் காதணிகளின் ஆடல்
உன் மென்மை விரல்கள்
உன் பூப்போன்ற பாதம்
உன் மெல்லிய விசும்பல்
உன் அழகிய கொஞ்சல்
உன் சிக்கனமான சினுங்கல்
அனைத்துமே தவனை முறையில்
எனை கொல்லுதடி
தேடிப் பார்க்கிறேன் உன்னை
காணவில்லை நீ
உன் நினைவுகளை தந்து –எனை
உறையச் செய்யும்
என் காதல் தலைவியே!!
நாம் ஒன்றாய் இருந்த
நொடிகளை நினைவென்னும்
நூலில் கோர்த்துள்ளேன்…என்றும்
கோர்த்துக்கொண்டே இருப்பேன்…
உனை என்னுள் சேர்த்துக் கொள்ள
துடிப்பேன்!!

வலி

வலியையும்
ரசிக்கின்றேன் உன்னால்
ஏன் என்றால்
அது உன் நினைவினில் எனை
வலிய இழுக்கின்றது….

வாழும் காலம் தோறும்!!

வெண்ணிலவே,
என் வானில்
தோன்றிய
ஒளிநிலவே!!
என் கண்நிலவாய்
உனைக் காப்பேன்
என்றும் கவின் நிலவே!!
எழில் நிலவே,
வளர்பிறையாய் நீ வளர
தேய்பிறையாய்
என் வாழ்வளிப்பேன்,
முழு நிலவாய்
ஒளிர்ந்திடு வாழ்வில்!!
என் மடியில்
பூத்த தங்கநிலவே,
வான் நிலவிலும்
களங்கம் இருக்கலாம்
என் வாழ் நிலவே
நீயோ என்றுமே
களங்கமற்ற
தரை நிலவு!!
பொன்னிலவே ,
பிறர் போற்றிட
பொழிந்திடு மழையாய் அன்பினை
வாழும் காலம் தோறும்!!