Thursday, August 1, 2013

அரசக் குழந்தை!!

அரசக் குழந்தைப்  பற்றி  ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன !!

இங்கு இருக்கும் பலர் அது என்ன அரச குடும்ப குழந்தை என்றால் இரண்டு கொம்புகள் இருக்கின்றனவா ? ஏன் இவ்வளவு விளம்பரம்? இந்த காலத்திலும் அரச குழந்தை , "ராயல் பேபி" என்பதெல்லாம் சுத்த பிதற்றலாக இருக்கின்றதே என்று இந்தியாவில் நிறைய புலம்பல்கள் கேட்கின்றது...

என்னே வியப்பு? இந்தியாவில் இந்த சிந்தனையா ? நம் குருதியில் இந்த முற்போக்கு சிந்தனை ஓட்டமா?? எப்படி ?? ஓ !! வெள்ளைக்காரன் நமை அடிமையாக 200 ஆண்டுகள் வைத்திருந்தானே அந்த காரணமா ?? மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆனால் ஒரு கேள்வி...

இங்கலாந்தில் பரப்படும் இந்த செய்திகளுக்கு கேள்வி கேட்கும்  தமிழன்,



ஏன்  2000 ஆண்டுகளாக பார்ப்பானுக்கு மட்டும் அடிமையாய் இருக்கும் அவலத்தினை கேட்க வாய் எழவில்லை ?

முகத்தில் பிறந்தவன் பார்ப்பான் என்றால் அவனுக்கு கூழை கும்பிடு போடுகின்றாய்;

நாம் சூத்திரன் என்றால் பல்லை இளித்துக்கொண்டு காலில் விழுந்து சாமி என்கின்றாய்;

பூணூல் போட்டுக்கொண்டு தான் உயர்ந்தவன் என்று இந்த நாட்டில் இன்றும் துணிச்சலாக   பார்ப்பன் திரிகின்றான் ,

அதை தட்டிக்கேட்க நமக்கு நா பிறழவில்லை , இங்கிலாந்து அரச குழந்தை என்ன சிறப்பானதா  என்று வாய் கிழிய பேசுகின்றோம் !!

என்று பூணூல் போடும் பார்ப்பனை பார்த்து உனக்கு எதுக்குடா பூணூல் , நீ என்ன உயர்வு?? மக்களில் அனைவரும் சமம், என்று அவன் பூணூல்தனை அறுத்து எடுத்துவிட்டு பிறகு இங்கிலாந்தில் நடப்பதை பற்றி விமர்சிக்கலாம் தோழர்களே !!

- கனிமொழி

Wednesday, July 31, 2013

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

நேற்று அறிஞர் அண்ணாவின் நீதிபதி வக்கீலாகிறார் மற்றும் மேலதிகாரி என்ற சிறுகதைகளைப் படித்தேன் ... அண்ணாவின் எழுத்தாற்றலை நான் சொல்ல வேண்டியதில்லை .. அழகான நடை... அதைவிட ஆழமான கருத்துகள். முடிந்தால் தோழர்கள் படிக்கவும். குறிப்பாக மேலதிகாரி என்ற சிறுகதை இன்றைக்கும் பார்ப்பன புத்தியோடு பொருந்தும்.

Sunday, July 28, 2013

கவிதை!!

எழுதத்தான்
நினைக்கின்றேன்
எதைப்பற்றி எழுத
என்றே வியக்கின்றேன்
வியப்பினையும்
விடுகதையையும்
விநாடிப்பொழுதில்
கவிதையாய்  புனைந்திட
வார்த்தைகளை கோர்க்கின்றேன் ...
 கவிதை
சரமாய் ,
சாரலாய் ,
சினமாய் ,
காதலாய் ,
வரிக்கப்படும்
எனினும்
கனப்பொழுதில்
ஆழ்துளையிட்டு
ஆணிவேராய்
ஆட்கொள்ளும்
வரிகளாய்
மலரும் எதுவும்
கவிதையே !!

Tuesday, July 23, 2013

நீ வளர வேண்டும் தமிழைப்போல !!

என் உயிர் சுமந்த ஓவியமே
கவின்  கொண்ட இதழ்களால்
எனை அம்மா என்றே
அழைத்திடும் அமுதே !

உன் சிறு  கரு விழிகள்
வண்டின் வடிவங்கள்
உன் மழலைச்சிரிப்பில்
ஒலி  மத்தாப்புகளின் சிதறல்கள் !

உன் சிறு பாதங்களின் மென்மை
உன் கைவிரல்களின் தொடுதல்
உன் உமிழ்நீரின் வாசம்
தாய்மையின் உச்சம் !!

என் மடி விளையாடும் கனியே
தவழ்ந்து வரும்  நல் முத்தே ;
விலையில்லா இரத்தினமே ;
நீ வளர வேண்டும் தமிழைப்போல !!

தமிழினத்தின் விடிவெள்ளியாய்
திசை எங்கும் ஒளி பரப்பிட
நான்  சுமந்த நெருப்புப்  பொறியே
திரவிடத்தந்தையின் விழுதே !

தாய் மானம் பெரிது -அதனினும்
தமிழினத்தின் மானம் பெரிது
என்றே தாலாட்டினேன்!

என் தாலாட்டு பின் நாளில்
தமிழ் மறவனின் பறையாய்
உன் உருவில் ஒலிக்கட்டும்

மலர் மொட்டாய் உறங்குகின்றாய்
நீ கண் மலர்ந்து காணும் நொடியில்
தமிழ்ப்பகை தூளாகும் !!
உனைச்  சுமந்த கருவறையும் உனை வாழ்த்தும் !!
 

Sunday, March 22, 2009

பல காலம் வாழ்ந்திடுக!!

வாழ்க்கை இணைநல

ஒப்பந்த விழாவே

திருமணமாம் புரிந்திடுக!!

இணையர்களாய் இணைந்தே

இனிதாய் நற்செயல்கள்

பல புரிந்திடுக!!

தமிழின் இனிமைபோல்

இல்லறம் இன்பமாய்

நடத்தியே மழலைச்

செல்வங்கள் அன்பின்

சின்னங்கள் என்றே

அளவாய் பெற்று மகிழ்ந்திடுக!!

இணையர் நாம்

இருவரும் வாழ்வினில் நண்பர்கள்

என்றே தெளிந்திடுக!!

இனிதாய் இணைந்தோம்

வாழ்வினில் ஒருவருக்கொருவர்

தாழ்ந்தவரும் அல்ல

அடிமையும் அல்ல

என்றே பகன்றிடுக!!

இன்பமும் துன்பமும்

எது வரினும்

வற்றிடாது நமக்குள்

அன்பென்னும் ஊற்று

என்றே முழங்கிடுக!!

நல்லதொரு குடும்பம்

பல்கலைக்கழகம் என்றே

தங்கள் இனிய

குடும்பந்தினை வழிநடத்திடுக!!

நம் தாய் தமிழ்நாட்டிற்கு

உழைப்பதே உவகை என்றே

இனப்பற்று கொண்டிடுக!!

தமிழ்தொண்டு செய்திடுக!!

பல காலம் வாழ்ந்திடுக!!

மதப் பற்று துறந்து

மனிதப் பற்று கொண்டு

மக்களனைவரையும் நேசித்திடுக!!

பல காலம் வாழ்ந்திடுக!!

கனவுத் தொழிற்சாலை

நீ இருப்பது கனவுத் தொழிற்சாலை

அதனால் தான் பல ஆடவரின்

கனவினில் தினம் நீ!! - ஆனால்

தளிர் மேனியில் தளர்வு வந்திடின்

இன்று உன் எழிலைக் காண திரளும்

கூட்டம் ஓட்டம் பிடித்திடும்!!-உன்னில்

காக்கைக்கும்கூட நாட்டம் குறைந்திடும்!!-உன்

உதவிக்கு வர உதவாக்கரையும் மறுத்திடும்!!

கனவாய் உன் வாழ்வு மாறாமல் இருந்திட

தோழியே கவனமாய் இருந்திடுவாய்!!-அது

கனவுத் தொழிற்சாலை மட்டுமல்ல உனை

போன்ற பல இளம் பெண்களின் உயிரினை

பறித்திட்ட சவத் தொழிற்சாலையும் தான்!!

என்று விடியும் அண்ணா??


அண்ணா!! நீ உறங்குகின்றாய் அலை கடல் ஓரம்!!
இங்கு தமிழகத்திலும் ஒவ்வொரு தமிழின உணர்வாளரின் நெஞ்சங்களிலும் ஓயா எண்ண அலைகள் !! எதைப்பற்றி என்றே கேட்கின்றாயோ??

' எந்த சிங்களம் சீறிப் போரிட்ட தமிழர்கள் முன் ஒரு காலத்தில் மண்டியிட்டதோ ? எந்தச் சிங்களவர் போரில் தோற்றதால் அக்கால முறைப்படி அடிமைகளாக்கப்பட்டு காவேரிக்கு கரை அமைக்கும் பணியினில் ஈடுபடுத்தபட்டார்களோ அந்தச் சிங்களவன் காண எம் தமிழர்களின் பிணங்கள் கரை ஒதுங்குகின்றனவே'

என்ற வேதனை குரலை வெளிப்படுத்தினாயே அன்று - அந்த சோகம் இன்று பன்மடங்காய் உயர்ந்து எம் தமிழரின் வாழ்வை - தொப்புள் கொடி உறவுகளை எம்மின பிஞ்சு மழலைகளை சிங்கள இனம் தன் இரத்த வெறி இனவெறி தீராமல் இன்றும் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றது அண்ணா!!

ஆனால் இங்குள்ள சில அரசியல்வாதிகளோ தமிழின மக்களின் பிணங்களின் மீது நாற்காலி போட்டு நாடாள நினைக்கின்றார்!!

'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ' ஆனால் தமிழகத்து அரசியலில் தனித் தீவாய் ஒவ்வொருவரும் நின்று எதைச் சாதிக்க போகின்றோம்?

'நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த உணர்வற்ற ஈன தமிழர்களை பார்த்திடும் போது!!

என்று தீரும் ஈழச் சிக்கல்? என்று கிடைக்கும் தமிழினத்திற்கு நீதி? என்று மடியும் சிங்கள இனவெறி?
பதில் இல்லா கேள்விகளாய் இவை...

இது உன்னுடைய நூற்றாண்டு ... உன் நூற்றாண்டிலாவது எம்மின மக்களின் உரிமை வென்றெடுக்கப்படுமா அண்ணா?

உன் தம்பிகள் சிலர் மௌனம் சாதிப்பது எங்களின் உயிரனை அழுத்துகின்றது!!

ஏன் இந்த மௌனம் ? புறப்படுங்கள் தமிழர்களே- ஈழ மக்களோடு போராட புறப்படுங்கள்...

எல்லைகள் தான் தொல்லைகள் என்றால்
தேசியம் தான் தடுக்கின்றது என்றால்

அந்த விலங்கினை அடித்து நொறுக்கிவிட்டு நம்மின மக்களின் வழிந்தோடும் குருதியினை நிறுத்திட புறப்படுங்கள் என்று வழி நடத்த உன் தம்பிகள் யாரும் முன் வரவில்லையே அண்ணா!!??

'பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு'

என்றே ஓங்கி குரல் கொடுத்து எவனடா எம்மினத்தை அழிக்க துணிந்தது இதோ வருகிறோம் உங்கள் எலும்பினை முறித்திட என்றே கூறிடவும் நாதி இல்லை அண்ணா!!

ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டுத் தமிழர்களும் அகதிகள் ஆனோம்!!

தமிழினமே பொறுத்தது போதும், பொங்கிடு!! இதோ என் உயிராயுதம் என்றே வீரமரணம் அடந்தான் உன் வீரத் தமிழ் பேரன் ஒருவன்!!

தமிழகத்தில் உணர்வினை ஊட்டிடவும் ஓர் தமிழனின் உயிர் ஆயுதமாக தேவைப்படுகிறது எனின் இந்த அவல நிலையை
என்னவென்று சொல்வது அண்ணா!!??


போதும் !போதும் புகழோடு வாழ்ந்த தமிழினம் இன்று பூண்டோடு அழிவது காண சகியவில்லை மனம் அண்ணா!!

குமறுகின்றது நெஞ்சம் !! எனின் ஏதும் செய்ய முடியா நிலையில் நடைப்பிணங்களாய் நாங்கள்!!

வரலாறு மன்னிக்குமா அண்ணா?? நம்மினம் அழிவதை கண் எதிரே பார்த்தும் ஒன்றும் செய்ய இயலா தமிழினம் என்று தானே காரி உமிழ்ந்திடும்??

அந்த பழி எத்துனை யுகங்கள் வரினும் மாறாத பழிச்சொல்லாய் பதிந்து விடுமே??

சொல்லுங்கள் அண்ணா!! உன் சிலைக்கு மாலை அணிவிப்பதால் மட்டும் உன் கனவினை நிறைவேற்றினவர்கள் ஆவோமோ??

நீ விரும்பியபடி புகழோடும் வாழ முடியாமல், புலியாய் போராடுகின்ற ஈழச் சகோதரர்களின் கைகளுக்கும் வலு சேர்க்க முடியாமல், வெறும் எழுத்தினாலும், பேச்சினாலும் எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திடும் ஈனத் தமிழினமாய் இன்று எங்கள் நிலை!!

மனதினில் பாரம் அழுத்துகின்றது அண்ணா!!
எம்மினம் படும் துன்பத்திற்கு கண்ணீர்த்துளிகளை மட்டுமே தந்திட முடிகின்றது எம்மால்!!

என்று விடியும் அண்ணா??