Wednesday, January 23, 2008

உண்மை நிலை!!

பெண் என்றாலே சமையல் வேலைகளுக்கும், வீட்டினை நிர்வாகிக்கவும் என்ற நிலை இன்று ஒரளவிற்கு நகர் புறங்களில் மாற்றம் பெற்றிருக்கின்றது என்றாலும்,

சில நேரங்களில் சில செயல்பாடுகளை பார்க்கின்றபோதும், எழுத்துக்களை வாசிக்கின்றபோதும் பெண்களை இன்றும் ஒரு சில வேலைகளுக்காக சித்தரிப்பது என்பது வேதனையை மட்டும் அல்ல கோபத்தையும் ஏற்படுத்தும்!!

நாம் பள்ளிகளில் படிக்கின்றபோது பாடப் புத்தகத்தில் பார்த்திருப்போம்,

அம்மா காய் அரிகின்றாள்
அப்பா செய்தித்தாள் படிக்கின்றார்
அக்காள் பெருக்கின்ற வேலை செய்கின்றாள்
தம்பி படிக்கின்றான்

என்று எழுதி இருக்கும்.(படத்தோடு)

சினிமா பாடல்கள் மட்டும் விதிவிலக்கா??

உன் சமையல் அறையில் நான் உப்பா? சக்கரையா? என்று பெண்னுக்கும்
நீ படிக்கும் அறையில் நான் கண்களா?புத்தகமா? என்று
ஆணுக்கும்

என்று வரிகள் தொடரும்...

பெண்கள் முன்னேற்றத்தை பற்றி புரட்ச்சியாக எழுதும் புரட்சி கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கூட,

இந்திக்கு தமிழ் நாட்டில் ஆதிக்கமாம்
நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே
................
என்ற கவிதை வரிகளில் இறுதியாக

மங்கை ஒருத்தி தரும் சுகமும்
எங்கள் மாத்தமிழுக்கு ஈடில்லை என்போம் என்பது

சிறு நெருடலைத் தரும்...

இப்படி கவிஞர்களின் வர்ணனைக்குப் பயன்படும் பெண்களைப் பற்றிய வரிகள் என்றுமே வேதனைதான்!!

இதில் , பெருமையாக ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால்
ஒரு பெண் இருக்கின்றாள் என்றால்..

ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் அவள் பட்ட துன்பங்களும் வலியும் தான் உள்ளது என்பது உண்மை நிலை!!

Tuesday, January 22, 2008

மாறுமா இந்நிலை!!??

என் நண்பர் என்னை தன் நண்பருக்கு அறிமுகம் செய்தார்
இவங்களுக்கு தமிழ் பற்று அதிகம்... தமிழ்ல கவிதைகள் எழுதுவார்கள் என்று...

எனக்குள் சிரித்துக்கொண்டாலும் அந்தச் சிரிப்பு வேதனையின் வெளிப்பாடு!!

தமிழ் என் தாய்மொழி. அதில் என் எண்ணங்களை பதிவு செய்வதற்கும் என் மொழி பற்றுக்கும் என்ன தொடர்பு!! அது இயற்கை!!

யாரும் ஒரு மலையாள கவிஞரிடம் சென்று உங்களுக்கு
மலையாளப் பற்று அதிகமா? கவிதைகள் மலையாளத்தில் எழுதுகின்றீரே என்று கேட்பதில்லை !!

தமிழ் நாட்டில் மட்டும் ஏன் இந்த நிலை?
தாய் மொழியில் எழுதினாலே அது மொழிப்பற்று என்று நினைக்கும் அவல நிலை என் மனதை வாட்டியது!!

மாறுமா இந்நிலை!!??

என்ஐ

என் உயிர் வளர்த்தேன்
உனைக் காணவே உயிர்த் துடித்தேன்
உன் மூச்சுக் காற்றில் உறைந்தேன்
உன்னால் பருகினேன் காதல் தேன்
என்ஐ, என் உயிரில் கலந்த உயிர்த்தேன் –நீ!!


என்ஐ - சங்க தமிழில் என்ஐ என்றால் என் தலைவனே என்று பொருள்!!

Wednesday, January 16, 2008

ஏக்க ரேகைகள்

அம்மா !!
என்று அழைத்தபடி
சிறுமி புத்தக பையோடு
தன் தாயை அணைக்கச் சென்றாள்!
மகிழ்ச்சி தந்த அவசரத்தில்
ஒரு சிறுமியின் மீது மோதினாள்
புத்தகங்கள் சிதறின!!
அதை எடுத்து தந்த அந்த பிஞ்சு கைகள்
தடவி பார்த்தன புத்தகங்களை
மறு கையில் கற்கள் சுமக்கும்
கூடையுடன்…..
ஏக்க ரேகைகள் முகத்தில்!!
கை ரேகைகளோ அழிந்த நிலையில்...

Friday, January 11, 2008

பொங்கட்டும் மகிழ்ச்சி...

உழைக்கும் மக்களின்
உணர்ச்சித் திருவிழா
உணவினை உலகுக்கு
வழங்கிடும் உயர்ந்தோரின்
திருவிழா
அறிவிற்கு உகந்த
ஆனந்த திருவிழா
ஓர் இனத்தின்
எழுச்சித் திருவிழா
மகிழ்ச்சியின் ஊற்றுத்
திருவிழா..
தமிழரின்
தை திங்கள் திருவிழா...
பொங்கல் திருவிழாவில்
பொங்கட்டும் மகிழ்ச்சி...


அனைவருக்கும் பொங்கல் திருவிழா வாழ்த்துக்கள்!!!

Wish You All a Very Happy Pongal!!!

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
ஜக்கம்மா சொல்ற
ஜக்கம்மா சொல்ற
என்று
புடு புடு காரனின் வாய்மொழி
கேட்டு புன் சிரிப்போடு
கேட்டேன் அவனிடம்,
நல்ல காலம் உனக்கு எப்பொது??
ஜக்கம்மா உனக்கு சொல்லவில்லையா??

Thursday, January 10, 2008

வாழ்வே மாயம்

வாழ்வே மாயம்
என்பார் சிலர்
மயங்கிடாதே
தயங்கிடாதே
மாயம் என்பதே
மாயை என்று
மனதில் கொண்டு
உறுதியோடு
வாழ்க்கைப்
படிக்கட்டுகளில்
பயணித்திடு!!

சின்னங்கள்

எங்கள் நாட்டில் காதலுக்கும் கூட
ஒரு சின்னம் தான்
ஆனால் கட்சிகளின் சின்னங்கள்
நட்சத்திர எண்ணிக்கைகளில்...

Tuesday, January 8, 2008

ஆசை ஆசையாய்...

மனம் என்ற கருவறைக்குள்
தினம் நான் சுமக்கும்
நித்தமும் என் மனதில்
நிறைந்திருக்கும் என்
மன்னவனே!!
உன் தோழியாய் வாழ்ந்திட ஆசை
உன் தோளில் நானும் சாய்ந்தாட ஆசை
உன் துணைவியாய் வாழ்ந்திட ஆசை
உன் துன்பத்தில் துணையாய் இருந்திட ஆசை
உன் இணையராய் இணைந்திட ஆசை
உன்னோடு இணைபிரியாமல் வாழ்ந்திட ஆசை
உன் தாயாய் இருந்திட ஆசை
அனுபொழுதும் உனை தாலாட்டிட ஆசை
உன் விழியாய் இருந்திட ஆசை
உன் விழி நீர் துடைக்கும் விரலாய்
இருந்திட ஆசை
உன் கனவாய் இருந்திட ஆசை
உனை களவாடிட ஆசை
உன் ஒலியாய் இருந்திட ஆசை
உன்னுள் ஒளிந்து உனை கொல்ல ஆசை
உன் மகிழ்ச்சியாய் இருந்திட ஆசை
உனை மகிழ்விக்க ஆசை
உன் மனதில் என்றுமே வாழ்ந்திட ஆசை
உனை மறக்காமல் இருந்திட ஆசை
உன்னுள் கரைந்திட ஆசை
உன்னில் சரிபாதியாய் வாழ்ந்திட ஆசை
உன்னொடு வாழும் வாழ்க்கைக்காக
காத்திருப்பேன் எதிர்ப்பாத்திருப்பேன்
ஆசை ஆசையாய்...

Friday, January 4, 2008

என் மூச்சினை மறப்பேன்!!

என் உயிரை துளைத்து
என் நினைவுகளை உரையவைத்து
என் மனதினை உன் வசத்தில் வைத்து
என் கண்களில் உன் உருவத்தை பதித்து
என் சுவாசத்தில் உன் வாசம் கலந்து
என் உணர்வில் உன் உணர்வை தைத்து
என்னுள் என்றுமே நிலைத்து வாழும்
என் காதல் மன்னவனே
மறந்தும் என்னை மறவாதே
மறந்தால் என் மூச்சினை
மறப்பேன்!!