Tuesday, November 6, 2007

இருள் வானில் புரட்சி மின்னலாய்...

இருள் வானில்
புரட்சி மின்னலாய்
தோன்றிய ஈரோட்டுச் சங்கநாதமே!


ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின்
கூன் நிமிர்த்திட்ட
வெண்தாடி வேந்தரே!

ஆணாதிக்க சமுதாயத்தில்
பெண்ணினத்தின் அடிமைவிலங்கை
உடைத்த திராவிடத்தந்தையே!

மூடத்தனத்தில் மூழ்கிப்போன
சமுதாயத்தை அறுவைசிகிச்சை
செய்த சமூகமருத்துவரே!

ஆதிக்கத்தின் அடிபீடத்தை
ஆணிவேரை அடியோடு
அறுத்திட்ட விடிவெள்ளியே!

படமெடுத்து ஆடிய
சாதிப்பாம்பை தடிகொண்டு
விரட்டிய சரித்திர நாயகரே!

அறிவிற்கு விலங்கிட்ட
சிறுநரிகளை உன் சிம்மக்குரலால்
கதிகலங்க செய்த எங்கள் அய்யாவே!


வயிற்றுவலி உயிர்குடித்தபோதும்
சூறாவளியாய் சுழன்று
மானத்தை மீட்டுத்தந்த கருப்புச்சிங்கமே!

இனமானம் காத்திட
இடியாய் முழங்கிய
செந்தமிழ்நாட்டின் சிந்தனை சிற்பியே!

தள்ளாத வயதிலும்
தள்ளாடிய சமுகத்தை
நின்பலம்கொண்டு தலைநிமிர்த்தினாய்!


வாழ்க நின் புகழ்
வளர்க வையம் நின்
பகுத்தறிவு பாதையில்!!

This Poem describes the great deeds of Thanthai Periyar - Socartes of South India on behalf of his 129th Birthday celebrated today.(September 17th)

கவிதை துளிகள்!!

புரட்சி

மக்களை புண்ணாக்கும் விதிகளை
மண்ணோடு மண்ணாக்கும்
வீரத்தின்
பொதுநலத்தின்
விவேகத்தின்
ஆயுதம்!!


கண்ணீர்

மனித துன்பத்தின்
விலையில்லா மருந்து!
கடல் நீரும் - கண்ணீரும் ஒன்றுதான்
ஆம்!

கடல் நீர் கரிக்கும்
கரையை அரிக்கும்
கண்ணீரும் கரிக்கும்
கவலையை அரிக்கும்!!


காதல்

சில எதிர்பார்ப்புகளில்
கட்டப்படும் வாழ்க்கை
கட்டிடம்!

புயலில் புரண்டும்விடலாம்
இடியில் இடிந்தும்விடலாம்
சுனாமியால் அழிந்தும்விடலாம்
அட!!
இவையெல்லாம்
காதலர்களுக்குத்தான்!
இது
சாகாவரம் பெற்று
பலரை சாகடித்துக்கொண்டிருக்கும்
விந்தையான உணர்வு!!

Sunday, November 4, 2007

நினைவிருக்கட்டும் பெண்ணே...


வாழ்க்கைப் பாதையில்
வல்லூறுகள் பயமுறுத்தும்
மெல்லினமாய் நீயிருந்தால்
வல்லினமாய் மாறிடு !!
துன்பத்தின் நிழலும்
தூரமாய் உனைவிட்டோடும்!!
உன் அடையாளம்
அழிக்கத் துணியும் சில
ஆதிக்க கோட்டான்களை
அவனியின் மூலையிலும்
உலவ விடாதே !
உன் புன்னகை
போதை! - என உளறும்
சில பித்தன்கள்மத்தியில்- உன்
புன்னகைத் தென்றல்
புரட்சிப்புயலாய் மாறட்டும்!!
உன் விழியிரண்டும்
வேல் என வர்ணிக்கும்
மூடர்களுக்கு - வேலின்
கூர்மையை உணர்த்திடு !
உன் அடிமைவிலங்கு
உடைக்கப்படும் என
காத்திராதே மயிலே!!
இறகைபிடுங்க
வருவார் சிலர்!!
ஆதிகத்தின் உடும்புபிடியை
ஈரோட்டுச் சம்மட்டியால்
உடைத்து,
உனைச்சுற்றி பின்னிடப்படும்
சதியை உன் மதியால் வென்றிடு !
கதி உனக்கிலை என
கழறும் கபடர்களை
சகதியில் மிதித்து
அவனியை வென்றிட புறப்படு!
சாதிக்கவே உன் பிறப்பு
நினைவிருக்கட்டும் பெண்ணே...

இரவு 10!!

காலையில் கண்விழிப்பு
கால்கடுக்க குடும்பவேலை
அழுதிடும் குழந்தைக்கு ,
ஆர்பரிக்கும் கணவனுக்கு ,
அல்லும்பகலும் சேவைசெய்து
அலுப்பாய் வந்தமர்ந்தாள்!!
கடிகாரம் ஒலித்தது
இரவு 10!!

கவிதை துளிகள் !!

வெடி
காசினை கரைக்கவில்லை
கரியாக்குகின்றோம்!!

சரவெடி

பட்டினி கிடப்போர்
சரமாய் வீதியோரங்களில்!
சரவெடி வெடித்தது சிலர்
வீடுகளின் முற்றத்தில்,
ஆடம்பரத்தின் சரமாய் சரவெடி !!


இடஒதுக்கீடு!!

பிச்சையல்ல
உரிமையின்
உணர்சிக்குரல்!!

Saturday, November 3, 2007

வீரவணக்கம் வீரவணக்கம்!!

வீரவணக்கம் வீரவணக்கம்!!
புரட்சி தளபதியே வீரவணக்கம்!
ஈழத்து சிங்கமே வீரவணக்கம்!
சுதந்திர காற்றை சுவாசிக்கும் வரை
கண்களில் தூக்கம் இல்லை
சிந்திய உன் உதிரத்தின் மீது ஆணை
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!!

Saturday, April 28, 2007

நீ வேண்டும் என் உயிர் செழித்திட!!

என் மனதின் அடி ஆழம்வரை
சென்றுப் பார்த்தாலும்
எங்கும் தெரிவது
உன் நிறம் தான்!
என் நரம்புகளின் நாணங்களிலும்
உன் ஓட்டம் தான்!
என் நகங்களிலும் உன் சாயம் தான்!
என் உள்ளங்கையிலும் உன் நிழல் தான்!
நீ இல்லாவிடில் என் உயிர் நில்லாது!
நீ இயங்காவிடில் என் இயக்கம் இல்லை!
நீ தான் என் உயிர் துடிப்பின் நீரோட்டம்!
நீ இல்லையேல் என் கண்களில் ஒளியில்லை!
நீ இல்லையேல் என் உடலில் சக்தியில்லை!
நீ இல்லையேல் என் வாழ்வில் இனிமை இல்லை!
எனக்கு மட்டும் இல்லாது தேவைப்படுகையில்
மற்றவருக்கும் உயிரளிக்கும் மாமருந்தே!
உயிர் துடிப்பின் மூலமே!
தானத்தில் சிறந்த தானமே!
எவர் உடம்பிலும் ஒரே நிறமாய்ஓடிடும் குருதியே!
நீ வேண்டும் என் உயிர் செழித்திட!!

This Poem says about the importance of hemoglobin content(blood) in one's life.