Tuesday, March 20, 2007

ஆட்டுக்குட்டி

சூரியன் உதிக்கையில
பொழுது விடியையல
கண்விழிச்சு எழுந்து வாசலகூட்டிப்பெருக்கி
அரிசியில கோலமிட்டு
கோயிலுக்கு வேண்டிய சமானை எடுத்துவச்சி
குளியல் முடிச்சி நெத்தி மத்தியல பொட்டு வச்சி
கயித்துக் கட்டிலில் ஒறங்கும் மச்சான
எழுப்பி குளிக்கச் சொல்லி
பொங்க வைக்க தேவையான சாமானைஅடுக்கி வைக்க - ஏ புள்ள!
அப்படின்னு பின்வாசல் நின்னு மச்சான் கூப்பாடு போட
மான் குட்டியின் துள்ளல்லோடு என்ன மச்சான்
எனமூச்சு வாங்கி நின்றாள் வள்ளி!!

அங்கு மே! மே!என கத்திக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியைப் பார்த்து
ஏது இந்த ஆட்டுக்குட்டி? என்று கருப்பன் கேட்க
பெருமூச்சு வாங்கியே வள்ளி சொன்னாள்
போனவாரம் நீ சுரம் வந்துபடுக்கையில விழ -
நம்ம ஊர் வைத்தியரும்
டவுன் ஆஸ்பத்திரிலதான் ஒன்ன காட்டணும்னு கைய விரிக்க
சோறு போட்ட மாட்டையும்
என் தாய் வீட்டு சீதனமா வந்த பித்தளை ஆண்டாவையும்வித்துப்போட்டு
வைத்தியம் பார்த்ததாலஎன் ராசா இப்போ எழுந்து நடமாட என் உள்ளம் துள்ளுது!
ஆனாலும் மறுபடியும் ஒனக்கு ஒடம்புக்கு
எதுவும் வாராம இருக்க
என் மவராசா நோய் நொடி இல்லாம வாழ
காத்து கருப்பு அண்டாம இருக்க
அம்மனுக்கு பொங்க வச்சு கெடா வெட்டினா
ஒடம்புக்கு வாராம நூறு வருசம் நீ இருப்பனு
பூசாரி சொன்னதால
நம்ம ஊரு சந்தையில இந்த ஆட்டுக்குட்டிய வாங்கியாந்தேன்!

அட பைத்தியமே! என்ற கருப்பன்

காத்தும் இல்ல கருப்பும் இல்ல
எல்லாம் வெறும் பித்தலாட்டம்
சுரம் வர காரணம் சுத்தமான தண்ணி குடிக்காததால
டாக்டரு பாக்கலைனா போயிருப்பேன் எப்பவோ!!
ஒரு உசிர் பொழச்சதுக்கு எந்த சாமி புள்ள
இன்னொரு உசிர் கேட்குது?
அப்படி கேட்டாதான் அது சாமி ஆகுமா? என்று கருப்பன் கேட்க
மன்னிச்சிரு மச்சான்
மரமண்டையில ஒரச்சுது -என்ற வள்ளி
மே! என்று கத்திய ஆட்டுக்குட்டியை
பாசத்தோடு வருடினாள்!!

No comments: