எதைப்பற்றி எழுத - என்
எழுதுகோலால் எதைப்பற்றி எழுத?
இடைவிடா சிந்தனை செய்தும்
எதைப்பற்றி எழுத என
எள்ளவும் தெரியவில்லை!!
காலந்தோறும் கணினி முன்
களைப்பாய் பணியாற்றுவதை எழுதவா?
கழுத்து வலிக்க பணிசெய்தும்
காசு பற்றாக்குறையை எழுதவா?
அயல் நாட்டிற்கு நம் அறிவை
அடகு வைக்கும் அவலத்தை எழுதவா?
எதைப்பற்றி எழுத என
எள்ளவும் தெளிவில்லை!!
அகதிகளாய் எம் மக்கள்
ஆதரவு இன்றி அல்லல் படுவதை எழுதவா?
அனுப்பொழுதும் இனப்படுகொலைக்கு
பலியாவதை எழுதவா?
எதைப்பற்றி எழுத என
எள்ளவும் தெளிவில்லை!!
எம் நாட்டின் பொருளாதார தரத்தை எழுதவா?
பொருள் ஒரு சிலரிடம் குவிந்து குத்தாட்டம்
போடும் குறைதனை எழுதவா?
பிடி சோறும் இன்றி தவிக்கும் எம் நாட்டின்
மறுபக்க வறுமையின்
கொடுமையை பகர்ந்திடவா?
எதைப்பற்றி எழுத என
எள்ளவும் தெளிவில்லை!!
இளைய சமூகம் சினிமா மோகம்
கொண்டு சீரழியும் சீர்கேட்டை எழுதவா?
நாகரிக நடையில் தன்மானம்
நலிவடைவதை எழுதவா?
எதைப்பற்றி எழுத என
எள்ளவும் தெளிவில்லை!!
மதத்தால் மதியிழக்கும்
மூடரைப்பற்றி எழுதவா?
மதவெறியால் மாண்ட
மக்களைப்பற்றி எழுதவா?
சாதியால் எம் மக்கள்
சிதையும் கதை எழுதவா?
சாதிகொண்டு அரசியல் நடத்தும்
ஈனப்பிழைப்பு அரசியல்
முதலைகள் பற்றி எழுதவா?
எதைப்பற்றி எழுத என
எள்ளவும் தெளிவில்லை!!
எம் நாட்டின் தண்ணீர்
பிரச்சனை எழுதவா?
எம் நாட்டின் எல்லை
பிரச்சனை எழுதவா?
எம் நாட்டை தகர்க்க
துடிக்கும் அண்டை
நாடுகளின் திட்டம் எழுதவா?
எதைப்பற்றி எழுத என
எள்ளவும் தெளிவில்லை!!
பெண்களின் நிலை பற்றி எழுதவா?
தீயில் கருகும் மலர்கள் பற்றி எழுதவா?
கருவில் கரையும் மொட்டுகள் பற்றி எழுதவா?
சமூகச் சிந்தனையின்றி அழகில் - செல்வத்தில்
நாட்டம் கொண்டு தன் நிலை அறியா
பேதைகள்பற்றி எழுதவா?
எதைப்பற்றி எழுத என
எள்ளவும் தெளிவில்லை!!
எதைப்பற்றி எழுத - என்
எழுதுகோலால் எதைப்பற்றி எழுத?
இடைவிடா சிந்தனை செய்தும்
எதைப்பற்றி எழுத என
எள்ளவும் தெரியவில்லை!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment