Friday, January 16, 2009

சுதந்திர தினம் - ஓர் அலசல்!!

சுதந்திரம் என்ன சுக்கா?மிளகா?கிளியே அக்கா சும்மா தர என்றே வினாத்தொடுத்தான் புதுவையின் புரட்சி கவி.

ஆம்!! சுதந்திர காற்றினை நாம் சுவாசிக்க கொடுத்த விலை நம் மக்களின் செந்நீர். எத்துனை பெற்றோர் தம் பிள்ளைகள் இழந்தனர்?
எத்துனை பெண்கள் தங்கள் இன்ப வாழ்வினை நாட்டு மக்கள் இன்புற்ற வாழ்வினுக்காய் இழந்தனர்;
எத்துனை தியாகங்கள்!!
எத்துனை இழப்புகள்!!
எத்துனை இளைஞர்கள் தங்கள் உயிர்தனை நாட்டுக்காய் ஈந்தனர்?

தூக்கு கயிற்றினை மனமுவந்து புன் சிரிப்போடு ஏற்றிட்ட விடுதலை வேங்கைகள் தான் எத்துனை!!??

விடுதலைப் போரின் கலங்கரை விளக்காய் திகழ்ந்த பகத்சிங்கின் வீரத்தினை நாடு மறந்திட முடியுமா?

ஆங்கில துரையிடம் கப்பம் செலுத்த மறுத்து தூக்கு கயிற்றினை முத்தமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தினைத்தான் மறக்க முடியுமா?

பெண்கள் வீட்டுப் பதுமைகளாய் இருந்த காலத்தில் தன் துணைவரான முத்து வடுகநாதரின் மறைவிற்குப்பின் ஆங்கில அரசினை எதிர்க்க படைகொண்டு போரிட்டு வீர மங்கை வேலு நாச்சியாரை மறந்திடத் தான் இயலுமா?

இறக்கும் தருவாயிலும் கொடிதனை பிடித்து உயிர் நீத்த கொடி காத்த குமரனை மறக்கவும் மனம் தலைபடுமா?

தன் பொருள் முழுவதும் இழந்து கப்பல் ஓட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை,அவர்களின் தியாகத்தினை மறந்திடவும் முடியுமா?

எத்துனைத் தியாகச் சுடர்கள் இந்த சுத்ந்திர தீபத்திற்காக தங்களை திரியாக்கினர் என்பதை பட்டியலிட்டால் அதன் நீளம் தான் முடிந்திடுமா?

இப்படி அரும்பாடுபட்டு இரத்த துளிகள் கொண்டு செதுக்கபட்டதுதான் இன்று இருக்கின்ற சுதந்திர இந்தியா.

61 -ம் சுதந்திர தினத்தினை கொண்டாடுகின்ற இந்த வேளையில் கடந்து வந்த பாதையினை திரும்பிப் பார்த்தால் மணம் வீசிடும் ரோசா மலர்களும் உண்டு அதில் சுருக்கென தைத்திடும் முட்களும் உண்டு.

இன்று அறிவுத் துறையில் ,பொருளாதர துறையில் , தொழில் துறையில் வல்லரசுகளையும் சவால் விடும் அளவிற்கு வளர்ந்துள்ள இந்தியா முழுவதும்மாய் சுதந்திரம் அடைந்திட வில்லை.

என்ன தோழர்களே!! வியப்பாய் இருக்கின்றதா? சாதனைகளை பட்டியலிட்டுக் களித்திடும் இத் தருணத்தில் நம் நாட்டின் சோதனைகளைக்கு வித்திட்ட சில எதிர்மறை நிலைகளையும் நாம் எண்ணியேத் தீர வேண்டும்!!

61-ம் சுதந்திர தின விழா!!
ஆனால் வறுமையில் உழலும் பல கோடி மக்களுக்கு என்று விடுதலை?எண்ணியதுண்டா நம் நெஞ்சம்?

உலக மக்கள் தொகையில் இரண்டாம் நிலையில் இருக்கும் நாம் இன்றளவும் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு தங்கப் பதக்கம் பெற்றிடவும் போராட வேணிடிய நிலை ஏன்? சிந்தித்ததுண்டா?

உலகத்தில் பிறப்பால் உயர்வு தாழ்வினை புகுத்திடும் மதம் இருந்தென்ன பயன் என்று எண்ணியதுண்டா?

கல்விக்கும் கடவுள் உண்டு என பறைசாற்றிய நாட்டில் எழுத்தறிவு இல்லா மக்களின் எண்ணிக்கை தெரியுமா?

மூடப் பழக்கமும் கடவுளரின் கதைகளும் அவதாரங்களின் அணிவகுப்பு கொண்ட நாட்டினில் ஏன் விஞ்சான கண்டுப்பிடிப்புகள் குறைவு என எண்னியதுண்டா?

நாட்டினையும் , மொழியினையும் பெண்ணாய் தாயாய் கண்டு போற்றும் நிலையில் பெண்களின் விகிதம் ஆண்களை விட ஏன் குறைவு ? பாலியல் வன்முறைக்கு பலியாகும் பெண்கள் எத்துனைப்பேர்? குடுப்ப வன்முறையால் , வரதட்சனைக் கொடுமையால் கொள்ளப்படும் ; தற்கொலை செய்து கொள்ளும் மாதர்களின் எண்ணிக்கை தெரியுமா?

எதிர்கால இந்தியாவின் தூண்கள் என்று சத்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்களால் பெரிதும் விரும்பப்பட்ட குழந்தைகள் , உணவு விடுதிகளில் கட்டிட வேலைகளிலும் தங்கள் எதிர்காலத்தினை தொலைப்பது பற்றி தீவிரமாய் எண்ணியதுண்டா?

உலக வரலாற்றிலயே மதப் போருக்காகத்தான் மனித குருதி அதிகம் சிந்தப்பட்டிருக்கின்றது. அப்படிப்பட்ட அபின் உண்ட போதையினைத்தரும் மதத்தால் மக்கள் பிளவுபட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் மதக் கலவரங்கள் பெருகி மனித உயிர்களை கொன்று குவிக்கின்றதே இத்தகைய கேடு விளைவிக்கும் மதத்தினை பின்பற்றியே தீர வேண்டுமா என்று எண்ணியதுண்டா? எண்ணிப்பாருங்கள் மக்களே!!

சுதந்திர இந்தியாவின், புண்ணிய மண்ணின் , புதல்வர்களே கேளுங்கள்!!

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் புள்ளி விவரம் இது!!

2004-2005 ஆம் ஆண்டின் கணக்கேடுப்பின்படி மக்கள் தொகையில் 27.5% மக்கள் வறுமை கோட்டிற்கும் கீழ் வாழ்கின்றனர். கேட்கும் போதுபதறவில்லையா நெஞ்சம்?

எண்ணிப் பாருங்கள் ஒரு வேலை உணவும் இல்லாமல் உடுத்த நல்லதொரு கந்தையும் கூட இல்லாமல் தங்கிட இடம் இல்லாமல் வாழும் மக்கள் பலகோடி பேர்கள் இருந்திட அடுக்கடுக்காய் செல்வம் சில மனிதர்களிடம் மட்டும் கொட்டிக் கிடக்கின்றதே?

பச்சிளம் குழந்தைகள் பாலுக்கும் கதறி அழும் தேசத்தில் தான் குடம்குடமாய் பால் அபிடேகங்கள்!! எண்ணிப்பாருங்கள் மக்களே! மூடத்தனத்தினை கெஞ்சியும் , கொஞ்சியும் கூறினாலும் இந்த உளுத்தர்கள் திருந்திட போவதில்லை .

இடித்துரைத்துக் கேட்டால் மனம் புண்படுகிறது என்றே பண் படுவர். ஆனால் பசியால் புண்ணாகிப்போன வயிற்றினைப் பற்றிச் சிறுதும் கவலை அற்ற கனவான்கள்.

திறமை பேசிடும் சில ஆதிக்க கூட்டத்தினரே விளையாட்டுத் துறையில் குறிப்பிட்ட விளையாட்டிற்கு மட்டும் பணம் கொட்டுகின்றது. உண்டு கொழுத்தே விளையாட்டில் கோட்டை விடுகின்றனர் சில சோம்பேறிகள். இந்தியா முழுவதும் சாதிக்க துடிக்கும் கருப்பு வைரங்கள் உள்ளனவே, அவர்களுக்கு முறையான வாய்ப்பு வழங்கப்படுகிறதா?

அல்லது அனைத்து விளையாட்டிற்கும் தான் முறையாக வசதி செய்து தரப்படுகின்றதா? இங்கும் ஆதிக்க வர்கத்தில் இருக்கும் சிலருக்குத்தனே வாய்ப்பு ஏற்படுகின்றது. மறுக்க முடியமா நடுநிலையாளர்களே?

உலகத்தில் ஏற்றத் தாழ்வுகள் எல்லா நாட்டிலும் உண்டு. அங்கே பணத்தால் , நிறத்தால் மனிதனை பிரித்தான். ஆனால் அக் கொடுமையினை விட கொடுமை பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பறைசாற்றிக் கொண்டு எவன் எக்கேடு கெட்டால் என்ன? தங்களின் ஆதிக்கமும் , சாதிய தன்மையும் பாதுகாத்திடவே ஊளையிடும் குள்ள நரிச் செயல்களை செய்திடும் கூட்டத்தினரை உலவ விட்டு நாடு சுதந்திரம் அடைந்துவிட்டது எனவே பறைசாற்றுவது எவ்வளவு மூடத்தனம்? அறிவு நாணயம்கொண்டு சிந்தித்தோமா?

மக்கள் தொகையில் சரிபாதியாய் உலவிடும் பெண்களை இழிவாய் நடத்திடலும், எத்துனை பெரிய பதவியல் இருந்திட்டாலும் பெண் தானே என்று இளக்காரமாய் பார்த்திடும் ஆணவப் பார்வையும் , கருவில் தோன்றிடும் போதே பெண் சிசு எனில் அழித்திட்டலும் சுதந்திர நாட்டின் நல்ல செயல்களோ ? எண்ணுங்கள் தோழர்களே!!

கருத்தினைக் கொண்டு எண்ணுங்கள்!! இத்துணை குறைகளும் களையப்படும் நாள் வருமா?

"இரவினில் சுதந்திரம் வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை"

என்றான் ஒரு கவிஞன். சுதந்திரம் கிடைத்தபோது அது ஒரு கருப்பு தினம் என்றார் தந்தை பெரியார்.

அய்யகோ!! என்று பதறினர் மக்கள். சுதந்திரம் எப்படி கருப்பு தினமாகும் என்றே வினவினார் அறிஞர் அண்ணாவும்.

இதோ இன்று புரிகின்றதா ஏன் சுதந்திரம் கருப்பு தினம் என்று ஐயா கூறினார் என்று.?

சுதந்திரத் தினத்தன்றும் சுதந்திரமாய் உலவிடமுடியாமல் தீவிரவாதம் நாட்டின் பக்கவாதமாய் உதயமாகி இருப்பதை கண்டீர்களா??

சாதனைகளைப் பற்றி கூறிக் கூறிக் களித்திடுவதில் மட்டும் பயனில்லை. சோதனைகளை கலைத்திட முன் வர வேண்டும். அன்னியர் ஆட்சியில் இருந்ததை விட சமூக நிலையில் கீழானவர்களாக தான் இன்று இருக்கின்றோம்.

கொடுமை என்னவெனில் நம் மக்களின் கீழ் ஆளப்படும் நிலையில் இப்படி இருக்கின்றோம்; மக்களாட்சியில் இந்த அவல நிலை.

விடுதலை பெற்ற இந்தியாவில் தான் 1948 -ல் மகாத்மா அவர்கள் ஒரு இந்து மதவெறியனால் சுடப்பட்டார்கள்!!

1948 தன்னை திருப்பிக்கொண்டபோது திருத்திக்கொள்ளவில்லை. மாறாக 1984 - ல் ஒரு சீக்கிய மதவெறியன் சுட்ட குண்டுகளுக்கு பலியானார் நாட்டின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள்!!

மதத்தின் இந்த அவல நிலை இன்றளவும் தொடர்கின்ற காரணத்தால் தான் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஜம்மு-காஷ்மீர் பிரச்சனை!!

இந்தியாவின் ஒற்றுமையை காண்பிக்க ஒவ்வொரு முறையும் கார்கில் போர் தான் வர முடியுமா? அப்படி ஒரு நிலை நாகரிக வளர்ச்சி பெற்ற சமுதாயத்தில் எவ்வளவு வெட்ககேடானது என்று எண்ணிப்பார்க்க வேண்டும்!! என்றுமே ஒற்றுமையாக வாழ்வது தான் அறிவார்ந்த சமுதாயாத்தின் குறிக்கோளாக இருக்க முடியும்!!

அரசியல்வாதிகளைக் குறைகூறிப் பயனில்லை . அரசியல் சாக்கடை . அங்கே புழுக்கள் உலவிடுமே தவிர நல்ல தலைவர்கள் இன்று உதிப்பதில்லை.

அதில் உழலும் தலைவர்கள் பலர் கொள்கையினை இழந்தே சிகரத்தினை எட்டிப் பிடிப்பதாய் நினைத்து வாழ்கின்றனர்!!.

அரசியலே வேண்டாம் என்று தான் வகித்த பதவிகளையும் உதறித் தள்ளி விட்டு ஒரு புரட்சி மிகு சமூக மாற்றத்தினை உண்டாக்கிய பெருமை தந்தை பெரியாரையே சாரும்.

அதே போன்று விடுதலைக்கு பின் தனக்கு கிடைக்கவிருந்த பிரதமர் பதவியை வேண்டாம் என்று உதறிய பெருமை மகாத்மா அவர்களையே சாரும்!!

கல்வி அனைவர்க்கும் சமம் என்றே குலக்கல்வி திட்டத்தினை ஒழித்த பெருமை காமராசர் அவர்களையே சாரும்!!

அப்படிப்பட்ட கண்ணியம் நிறைந்த தலைவர்களை இன்று காண்பது அரிது!!

அதே போல் தான் உண்மை விடுதலை நாம் பெறுவது என்பதும் இத்தகு கொடுமைகள் இருக்கின்றவரை அரிது!!

அனைவரும் சமம் !! சாதி, மதம் , கடவுள் இவை எதுவுமே மானுடப் பற்றின் முன் பெரிதில்லை. மானுட அன்பு, மனித நேயம் மட்டுமே உன்னதமானது என்ற நினைவு என்று மக்களின் நெஞ்சங்களில் ஊன்றுகின்றதோ அன்று தான் தோழர்களே உண்மைச் சுதந்திரக் காற்றினை சுவாசித்தவர்கள் ஆவோம்!!

விடுதலை முரசினை அன்று விண் அதிர ஒலித்திடுவோம்!!

No comments: