Sunday, March 22, 2009

பல காலம் வாழ்ந்திடுக!!

வாழ்க்கை இணைநல

ஒப்பந்த விழாவே

திருமணமாம் புரிந்திடுக!!

இணையர்களாய் இணைந்தே

இனிதாய் நற்செயல்கள்

பல புரிந்திடுக!!

தமிழின் இனிமைபோல்

இல்லறம் இன்பமாய்

நடத்தியே மழலைச்

செல்வங்கள் அன்பின்

சின்னங்கள் என்றே

அளவாய் பெற்று மகிழ்ந்திடுக!!

இணையர் நாம்

இருவரும் வாழ்வினில் நண்பர்கள்

என்றே தெளிந்திடுக!!

இனிதாய் இணைந்தோம்

வாழ்வினில் ஒருவருக்கொருவர்

தாழ்ந்தவரும் அல்ல

அடிமையும் அல்ல

என்றே பகன்றிடுக!!

இன்பமும் துன்பமும்

எது வரினும்

வற்றிடாது நமக்குள்

அன்பென்னும் ஊற்று

என்றே முழங்கிடுக!!

நல்லதொரு குடும்பம்

பல்கலைக்கழகம் என்றே

தங்கள் இனிய

குடும்பந்தினை வழிநடத்திடுக!!

நம் தாய் தமிழ்நாட்டிற்கு

உழைப்பதே உவகை என்றே

இனப்பற்று கொண்டிடுக!!

தமிழ்தொண்டு செய்திடுக!!

பல காலம் வாழ்ந்திடுக!!

மதப் பற்று துறந்து

மனிதப் பற்று கொண்டு

மக்களனைவரையும் நேசித்திடுக!!

பல காலம் வாழ்ந்திடுக!!

கனவுத் தொழிற்சாலை

நீ இருப்பது கனவுத் தொழிற்சாலை

அதனால் தான் பல ஆடவரின்

கனவினில் தினம் நீ!! - ஆனால்

தளிர் மேனியில் தளர்வு வந்திடின்

இன்று உன் எழிலைக் காண திரளும்

கூட்டம் ஓட்டம் பிடித்திடும்!!-உன்னில்

காக்கைக்கும்கூட நாட்டம் குறைந்திடும்!!-உன்

உதவிக்கு வர உதவாக்கரையும் மறுத்திடும்!!

கனவாய் உன் வாழ்வு மாறாமல் இருந்திட

தோழியே கவனமாய் இருந்திடுவாய்!!-அது

கனவுத் தொழிற்சாலை மட்டுமல்ல உனை

போன்ற பல இளம் பெண்களின் உயிரினை

பறித்திட்ட சவத் தொழிற்சாலையும் தான்!!

என்று விடியும் அண்ணா??


அண்ணா!! நீ உறங்குகின்றாய் அலை கடல் ஓரம்!!
இங்கு தமிழகத்திலும் ஒவ்வொரு தமிழின உணர்வாளரின் நெஞ்சங்களிலும் ஓயா எண்ண அலைகள் !! எதைப்பற்றி என்றே கேட்கின்றாயோ??

' எந்த சிங்களம் சீறிப் போரிட்ட தமிழர்கள் முன் ஒரு காலத்தில் மண்டியிட்டதோ ? எந்தச் சிங்களவர் போரில் தோற்றதால் அக்கால முறைப்படி அடிமைகளாக்கப்பட்டு காவேரிக்கு கரை அமைக்கும் பணியினில் ஈடுபடுத்தபட்டார்களோ அந்தச் சிங்களவன் காண எம் தமிழர்களின் பிணங்கள் கரை ஒதுங்குகின்றனவே'

என்ற வேதனை குரலை வெளிப்படுத்தினாயே அன்று - அந்த சோகம் இன்று பன்மடங்காய் உயர்ந்து எம் தமிழரின் வாழ்வை - தொப்புள் கொடி உறவுகளை எம்மின பிஞ்சு மழலைகளை சிங்கள இனம் தன் இரத்த வெறி இனவெறி தீராமல் இன்றும் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றது அண்ணா!!

ஆனால் இங்குள்ள சில அரசியல்வாதிகளோ தமிழின மக்களின் பிணங்களின் மீது நாற்காலி போட்டு நாடாள நினைக்கின்றார்!!

'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ' ஆனால் தமிழகத்து அரசியலில் தனித் தீவாய் ஒவ்வொருவரும் நின்று எதைச் சாதிக்க போகின்றோம்?

'நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த உணர்வற்ற ஈன தமிழர்களை பார்த்திடும் போது!!

என்று தீரும் ஈழச் சிக்கல்? என்று கிடைக்கும் தமிழினத்திற்கு நீதி? என்று மடியும் சிங்கள இனவெறி?
பதில் இல்லா கேள்விகளாய் இவை...

இது உன்னுடைய நூற்றாண்டு ... உன் நூற்றாண்டிலாவது எம்மின மக்களின் உரிமை வென்றெடுக்கப்படுமா அண்ணா?

உன் தம்பிகள் சிலர் மௌனம் சாதிப்பது எங்களின் உயிரனை அழுத்துகின்றது!!

ஏன் இந்த மௌனம் ? புறப்படுங்கள் தமிழர்களே- ஈழ மக்களோடு போராட புறப்படுங்கள்...

எல்லைகள் தான் தொல்லைகள் என்றால்
தேசியம் தான் தடுக்கின்றது என்றால்

அந்த விலங்கினை அடித்து நொறுக்கிவிட்டு நம்மின மக்களின் வழிந்தோடும் குருதியினை நிறுத்திட புறப்படுங்கள் என்று வழி நடத்த உன் தம்பிகள் யாரும் முன் வரவில்லையே அண்ணா!!??

'பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு'

என்றே ஓங்கி குரல் கொடுத்து எவனடா எம்மினத்தை அழிக்க துணிந்தது இதோ வருகிறோம் உங்கள் எலும்பினை முறித்திட என்றே கூறிடவும் நாதி இல்லை அண்ணா!!

ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டுத் தமிழர்களும் அகதிகள் ஆனோம்!!

தமிழினமே பொறுத்தது போதும், பொங்கிடு!! இதோ என் உயிராயுதம் என்றே வீரமரணம் அடந்தான் உன் வீரத் தமிழ் பேரன் ஒருவன்!!

தமிழகத்தில் உணர்வினை ஊட்டிடவும் ஓர் தமிழனின் உயிர் ஆயுதமாக தேவைப்படுகிறது எனின் இந்த அவல நிலையை
என்னவென்று சொல்வது அண்ணா!!??


போதும் !போதும் புகழோடு வாழ்ந்த தமிழினம் இன்று பூண்டோடு அழிவது காண சகியவில்லை மனம் அண்ணா!!

குமறுகின்றது நெஞ்சம் !! எனின் ஏதும் செய்ய முடியா நிலையில் நடைப்பிணங்களாய் நாங்கள்!!

வரலாறு மன்னிக்குமா அண்ணா?? நம்மினம் அழிவதை கண் எதிரே பார்த்தும் ஒன்றும் செய்ய இயலா தமிழினம் என்று தானே காரி உமிழ்ந்திடும்??

அந்த பழி எத்துனை யுகங்கள் வரினும் மாறாத பழிச்சொல்லாய் பதிந்து விடுமே??

சொல்லுங்கள் அண்ணா!! உன் சிலைக்கு மாலை அணிவிப்பதால் மட்டும் உன் கனவினை நிறைவேற்றினவர்கள் ஆவோமோ??

நீ விரும்பியபடி புகழோடும் வாழ முடியாமல், புலியாய் போராடுகின்ற ஈழச் சகோதரர்களின் கைகளுக்கும் வலு சேர்க்க முடியாமல், வெறும் எழுத்தினாலும், பேச்சினாலும் எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திடும் ஈனத் தமிழினமாய் இன்று எங்கள் நிலை!!

மனதினில் பாரம் அழுத்துகின்றது அண்ணா!!
எம்மினம் படும் துன்பத்திற்கு கண்ணீர்த்துளிகளை மட்டுமே தந்திட முடிகின்றது எம்மால்!!

என்று விடியும் அண்ணா??

Friday, January 16, 2009

அறிவு வளர்த்திடு!!

தேனினும் இனிய
சுவை கொண்ட தமிழே!!- நீ
அறிவுச்சுரங்கத்தின்
மொழியாய் ஒளிர்ந்திடும் நாள்
எந்நாள்?

பக்தி மொழியாய்
முதலையுண்ட பெண்ணை
உயிர்பித்த மொழியாய்
தாளிட்ட கோயில் கதவினை
திறந்திட்ட மொழியாய்
பொய் கதைகள்
உன்மேல் புனைந்திட்டே -உன்
அறிவியல் வளர்ச்சி
தடுத்திட்டார் செம்மொழியே!!

இத்துனை அற்புதங்கள்
நீ நிகழ்த்தியிருப்பதாய்
கூறிடும் கனவான்கள்தான்
நீ வழிபாடு மொழியெனின்
உனை 'நீச' மொழியென்றே
ஓடுகின்றார் ஒரு காதத்திற்கு!!

பக்தி மொழியாய்
உனை ஆக்கிட்ட
சூதும் உனக்கு
புரிகின்றதா
என் தாய் தமிழ் மொழியே!!??


தேவாரமும் திருவாசகமும்
கல் மனதினையும் உருகிடச் செய்திடும்
என்றே கூவுவார்- ஆனால்
சிதம்பரத்தில் பாடிட சென்றிடும்
தீட்சதரை துரத்தியே அடித்திடுவர்!!

பக்தி மொழி தெய்வ மொழி
எனவே உனை அழைப்பர்
கோயில்களில் உனை துரத்தியடித்திடும்போது
கடவுள் சிலைகள் 'கல்'லாய் அமர்ந்தனவே!!
அப்பொழுதும் புரிந்திடவில்லையா தமிழே
சில ஆதிக்க வர்க்கத்தின் எண்ணம்??

உனை பக்தி மொழியாய் மாற்றியே
நம் மக்கள் மதியில் பக்தி
போதையினை ஏற்றியே
சிந்திக்க விடாது தடுத்திட
உனை அறிவியல் மொழியாய்
வளர விடாது தடுத்திடவே- சில
சாணக்கியர்கள் செய்த ஏற்பாடு!!
புரிந்திடு இதனை என் தமிழே!!

இந்திப்பெண் ஆதிக்கம்
கொள்ள வரும்போது உன் வலிக்கரம்
கொண்டு தடுத்தனை!!- ஆனால்
பக்தி போதையில் நீ் சிக்குண்டு
தொலைந்து போகாதே!!

கடவுளின் கற்பனை அற்புதங்களை
ஒழுக்கமற்ற லீலைகளை
செப்பியது போதும்!!

அறிவியல் உண்மைகளை
வான் அறிவியலை
மருத்துவ குணங்களை
புதிய கண்டுபிடிப்பினைப் பற்றியே
அழகு தமிழில்
படைத்திடு!!
காலங்கள் கடந்து அறிவு வளர்த்திடு!!

மனித இனம்

புலியும் சிங்கமும்
தன் இனம் அழிக்க துணியா!!- ஆனால்
ஆறறிவு பெற்ற மனித இனம்
அறிவியல் கண்டுபிடிப்பு
அத்துணையையும் தன் இனத்தின்
அழிவிற்காய் பயன்படுத்தும்
தன்னல உருவங்களாய்!!
ஆறாம் அறிவினை
சிறிதும் பயன்படுத்தா
மூடர்களாய் அவனியிலே
உலவிடும் இனம்!!
பகுத்தறிவு கொண்டே சிந்தித்து
செயல்படா மிருகமும் தன் இனம்
அழியும் போது கண்ணீர் சிந்திடும் ;
மனம் துடித்திடும்;-ஆனால்
மதங்'கள்' தந்திட்ட போதையால்
சாதி'கள்' தந்த
பித்தத்தினால் ஒன்றுமறியா
தன் அண்டை
மனிதன் அழிவுறும்போதும்
குருதியில் வலிகொண்டு துடித்திடும்போதும்
கைகொட்டியே சிரித்திடும்
ஆனந்த கூத்தாடிடும்
மனிதம் வற்றுப்போன
அருவருப்பான மனித ஆந்தைகள்!!
நாட்டில் உலவிட தடையிட்டு
காட்டினில் விடினும்
ஒற்றுமை கொண்ட மிருகங்களையும்
பிரித்தே கொன்றிடும்
கொடூர மதியாளர்கள்!!
இனி இந்த
மனித கோட்டான்கள்
உலவிட உகந்தயிடம்
மன'நல' காப்பகங்கள் மட்டுமே!!

தீ பரவட்டும்

புரட்சி தீ பரவட்டும்
புரட்டர்களை புரட்டிடவே
புரட்சி தீ பரவட்டும்
ஊழல் பெருச்சாளிகளை
அடித்து கருக்கட்டும்
புரட்சி தீ பரவட்டும்
புல்லர்களை புண்ணாக்கட்டும்
புரட்சி தீ பரவட்டும்
பெண்ணடிமை போற்றிடும்
கனவான்களை தீயால் உமிழட்டும்
புரட்சி தீ பரவட்டும்
மதம் பிடித்து அலையும்
மனிதர்களை மண்ணில் புதைக்கட்டும்
புரட்சி தீ பரவட்டும்
பொய்யர்களை பொடியாக்கட்டும்
புரட்சி தீ பரவட்டும்-பூமியில்
புன்னகை மறக்கடிக்கும்
தீவிர மாக்களை அழிக்கட்டும்
புரட்சி தீ பரவட்டும்
பொல்லா வாழ்வு வாழ்ந்திடும்
பொறுப்பில்லா கள்ளர்களை நொறுக்கட்டும்
புரட்சி தீ பரவட்டும்
புண்ணிய பூமி இது என்று
புளுகியே பிணக் காடாய்
மாற்றும் எத்தர்கள் எரிக்கப்படட்டும்
புரட்சி தீ பரவட்டும்
அறியாமை அகன்றிட
அமைதி நிலவிட
பகுத்தறிவு வளர்ந்திட
புரட்சி தீ பரவட்டும்
விண்ணையும் தொட்டு
பரவட்டும்
பாரில் சமத்துவம்
நிலைத்திட பரவட்டும்
புரட்சி தீ பரவட்டும்!!

தோழனே

ில மரணங்கள் நம்மை அதிரவைக்கும்;இடியென மனதில் ஒரு அதிர்வினை தரும். அப்படிப்பட்ட நேரங்களில் செய்வதரியாது மனம் குமுறும்.

நண்பர்கள் தினம். என்றுமே மறக்க முடியா ஒரு விழா. நண்பர்கள் இருக்கும் எவர் வாழ்வும் வீண் இல்லை. அதுவும் குறிப்பாக கல்லூரியில் பயிலும் அந்த நான்கு வருடங்களும் வாழ்நாளில் என்றுமே மனதில் வைத்து ரசிக்கப்படவேண்டிய தருணங்கள். நண்பர்களின் மகிழ்ச்சி சிரிப்பில் கிண்டல் கேலிகளில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்த பறவைகளாய் இருந்தோம். அந்த மகிழ்ச்சி பறவைகளில் ஒரு பறவையினை நன்பர்கள் தினத்தன்று ஒரு கொடூர சாலை விபத்தில் பறிகொடுத்துவிட்டோம்.

அப்ரஹாம். எங்கள் நண்பனின் பெயர். வகுப்பில் முதல் வரிசை எண் அப்ரஹாம் தான். மிகச் சிறந்த நண்பன்;அனைவரிடமும் பண்பாய்,அன்பாய் பழகக்கூடிய அற்புத மனிதன். அதிர்ந்து கூட பேச அறியா நண்பன். TCS
நிறுவனத்தில் பணியாற்றி இந்த 3 வருடங்களில் மிகச் சிறந்த நிலையினை தன் கடின உழைப்பால் அடைந்த அருமையான உழைப்பாளி. மிக எளிய குடும்பத்தில் பிறந்து தன் முயற்சியால் முன்னேறி வெற்றி பெற்றவன். குடும்ப சூழ்நிலை உணர்ந்து படித்தான். இவனை மட்டுமே நம்பி இருந்த குடும்பத்தினருக்கு மிகப் பெரிய இழப்பு. தாயின் கண்ணீரும் , தந்தையின் கதறலும் , தங்கையின் துயரமும் நெஞ்சத்தினை விட்டு அகலவில்லை. இத்துனைக்கும் அவன் மிக நிதானமாக வண்டியினை ஓட்டிச் சென்றும், தலைக்கவசம் அணிந்தும் அது என் நண்பனின் உயிரினைக் காக்க பயன்படவில்லை.

இனி நண்பர்கள் தினம் எங்களுக்கு முன் போல் இருக்கபோவதில்லை.

சில மரணங்கள் நம்மை அதிரவைக்கும்;இடியென மனதில் ஒரு அதிர்வினை தரும். அப்படிப்பட்ட நேரங்களில் செய்வதரியாது மனம் குமுறும்.

தோழனே
தோழைமையுடன் அனைவரிடமும்
பழகிய அற்புத தோழனே
பண்பும் அன்பும் நிறைந்த
இனிய நண்பனே
அதிர்ந்தும் பேசிடா
அருமை நண்பனே
உன் மரணத்தால்
எங்களின் நெஞ்சந்தனை
அதிர வைத்து மீளா
நித்திரையில் ஆழ்ந்ததும்
ஏனோ?
உன் பிரிவு
உண்மை என
அறிந்தும் ஏற்றுக் கொள்ள
மனம் மறுக்கின்றது
உன் மரணம் தந்த
இடியெனும் அதிர்வால்
வார்த்தைகளும்
மறக்கின்றது
நண்பர்கள் தினத்தில்
எங்களை விட்டுப் பிரிந்த
உன் நினைவுகள்
என்றுமே எங்கள் மனங்களில்
நிழலாடும்!!

ஆசை சகியே

உன் இரு விழிகளில் என் உலகினை காண ஆசை சகியே
உன் இதழ் சிரிப்பின் ஆதாரமாய் இருந்திட ஆசை சகியே
உன் வாழ்வுச்சூரியனாய் ஒளி தந்திட ஆசை சகியே
உன் உயிர் சூழற்சியின் தூண்டுகோலாய் இருந்திட ஆசை சகியே
உன் மேல் எனக்கும் தான் கொள்ளை ஆசை சகியே
உன் உயிரினை கொள்ளை அடித்திட ஆசை சகியே
உனை கொள்ள ஆசை சகியே - ஆனால்
உன் மொளனம் உனை கொள்ள துடித்திடும்
எனை கொல்லுதடி சகியே!!

பேரறிஞரின் நூற்றாண்டில்...


காஞ்சியின் மடியில்
பூத்த குறிஞ்சி மலரே!!
பாரெங்கும் பெரியாரின்
பகுத்தறிவு மணம் வீசச்
செய்த இரும்பு நெஞ்சமே!!
தந்தையின் கட்டளைகளை
தீரத்தோடு நிறைவேற்றிய
வீரத்தின் விளைநிலமே!!
அஞ்சாமலே அரும்பணிகள்
ஆற்றிட்ட கொள்கைச்செம்மலே!!
உன் நூற்றாண்டு விழாவினை
கொண்டாடும் இவ்வேளையில்
நினைத்துப்பார்க்கின்றோம்!!

ஏத்தன்ஸ் நகரின் புரட்சி
தந்தை சாக்ரடீசுக்கு ஒரு
பிளாட்டோ;
திராவிட நாட்டின் புரட்சி
தந்தை பெரியாருக்கு நீ!!

திராவிடத் தந்தையின்
தளபதியே!!

தப்பிழைத்தோரையும்
தம்பி என அழைத்தே
நின் பாச வலையினில்
உருகச் செய்தாய்;
வசீகரப்பேச்சில் வளைத்தாய்;
கருத்தழகு எழுத்தாற்றலில் கவர்ந்தாய்;

அறிஞர் எனின்
நீ மட்டும் என்றே
அழியாப் புகழ்
பெற்றே திகழ்ந்தாய்!!
இன்றும் திகழ்கிறாய்!!
என்றும் திகழ்வாய்!!
வேந்தே வாழ்க நின் புகழ்!!

ஆசை சகியே!!

உன் இரு விழிகளில் என் உலகினை காண ஆசை சகியே
உன் இதழ் சிரிப்பின் ஆதாரமாய் இருந்திட ஆசை சகியே
உன் வாழ்வுச்சூரியனாய் ஒளி தந்திட ஆசை சகியே
உன் உயிர் சூழற்சியின் தூண்டுகோலாய் இருந்திட ஆசை சகியே
உன் மேல் எனக்கும் தான் கொள்ளை ஆசை சகியே
உன் உயிரினை கொள்ளை அடித்திட ஆசை சகியே
உனை கொள்ள ஆசை சகியே - ஆனால்
உன் மொளனம் உனை கொள்ள துடித்திடும்
எனை கொல்லுதடி சகியே!!

தீ பரவட்டும்


புரட்சி தீ பரவட்டும்
புரட்டர்களை புரட்டிடவே
புரட்சி தீ பரவட்டும்
ஊழல் பெருச்சாளிகளை
அடித்து கருக்கட்டும்
புரட்சி தீ பரவட்டும்
புல்லர்களை புண்ணாக்கட்டும்
புரட்சி தீ பரவட்டும்
பெண்ணடிமை போற்றிடும்
கனவான்களை தீயால் உமிழட்டும்
புரட்சி தீ பரவட்டும்
மதம் பிடித்து அலையும்
மனிதர்களை மண்ணில் புதைக்கட்டும்
புரட்சி தீ பரவட்டும்
பொய்யர்களை பொடியாக்கட்டும்
புரட்சி தீ பரவட்டும்-பூமியில்
புன்னகை மறக்கடிக்கும்
தீவிர மாக்களை அழிக்கட்டும்
புரட்சி தீ பரவட்டும்
பொல்லா வாழ்வு வாழ்ந்திடும்
பொறுப்பில்லா கள்ளர்களை நொறுக்கட்டும்
புரட்சி தீ பரவட்டும்
புண்ணிய பூமி இது என்று
புளுகியே பிணக் காடாய்
மாற்றும் எத்தர்கள் எரிக்கப்படட்டும்
புரட்சி தீ பரவட்டும்
அறியாமை அகன்றிட
அமைதி நிலவிட
பகுத்தறிவு வளர்ந்திட
புரட்சி தீ பரவட்டும்
விண்ணையும் தொட்டு
பரவட்டும்
பாரில் சமத்துவம்
நிலைத்திட பரவட்டும்
புரட்சி தீ பரவட்டும்!!

கலங்கரை விளக்கு !!


பாதை மாறாமலே
கப்பலினை கரைசேர்த்திடும்
கலங்கரை விளக்கு
பாதை அது மாறினும்
வழிகாட்டியே
வாழ்வினை உய்வித்திடும்
நட்பின் விளக்கு- அது
அன்பின் விலங்கு -அதனை
அனுப்பொழுதும் விலக்காமல் விளங்கு!!- பின்
வாழ்வின் உன்னதம் விலங்கிடும்!!
துன்பமும் விலகிடும்!!

வரலாற்றின் பொன்னேடுகளில்...


உள்ளதை உள்ளபடி
உரைத்திடும் உணர்வாய்
உணர்வுகளின் வெளிப்பாடாய்
துயரத்தின் வடிகாலாய்
காலத்தினால் அழிக்க முடியா
அன்பின் ஊற்றாய்
ஆழ்கடலும் அழித்திடும்
துன்பம் வருகையில்,
கரை சேர்த்திடும் ஓடமாய்
கண்ணை இமை காப்பதுபோல்
காத்திடும் அரணாய்
மகிழ்ச்சியை மட்டுமே
பரிசாய் தந்திடும்
அரசனாய்
தன்னம்பிக்கை தரும்
நம்பிக்கையாய்
காலங்கள் கடந்தாலும்
அழியா பற்றுடன்
உனை என்றுமே
தாங்கும் நட்பு
வரலாற்றின் பொன்னேடுகளில்
பொறிக்கப்பட வேண்டிய
கைமாறு எதிர்பாரா
பாசத்தின் சின்னம் !!

முரண்பாடு!!


பெண்ணை சீண்டுவது
குற்றம் என்றே பகன்றிடுவார்
கேலி பேசுவதும்
கைதனைப் பற்றி
இழுப்பதும் தவறு எனவே
குதித்திடுவார் - ஆனால்
கிருஷ்ண லீலைகள்
பற்றியே பாடி பாடி
ஆனந்தம் கொண்டிடும்
இவர் உள்ளம்!!

என் மனம் மறந்திடா!!



காதல் உலகம் உனக்கென ஒன்று
கனப்பொழுதில் அமைப்பேன் என் கண்மணியே
காலங்கள் கடந்துபோயினும் நான் கொண்ட
கள்ளமற்ற அன்பு என்றுமே
கானல் நீராய் மாறாது என் மகிழம்பூவே!!
கன்னித்தமிழின் சுவையாய்
இனித்திடும் உன் பேச்சினை
காலந்தோறும் கவிதையெனவே சுவைப்பேன்!!
நீ என்னோடு இருந்திட்ட நொடிகளை;
என் வாழ்வினில் வாழ்விணை நீ
எனக்களித்த இன்ப நிமிடங்களை;
மரணம் தழுவையிலும் என் மனம் மறந்திடா!!

சுதந்திர தினம் - ஓர் அலசல்!!

சுதந்திரம் என்ன சுக்கா?மிளகா?கிளியே அக்கா சும்மா தர என்றே வினாத்தொடுத்தான் புதுவையின் புரட்சி கவி.

ஆம்!! சுதந்திர காற்றினை நாம் சுவாசிக்க கொடுத்த விலை நம் மக்களின் செந்நீர். எத்துனை பெற்றோர் தம் பிள்ளைகள் இழந்தனர்?
எத்துனை பெண்கள் தங்கள் இன்ப வாழ்வினை நாட்டு மக்கள் இன்புற்ற வாழ்வினுக்காய் இழந்தனர்;
எத்துனை தியாகங்கள்!!
எத்துனை இழப்புகள்!!
எத்துனை இளைஞர்கள் தங்கள் உயிர்தனை நாட்டுக்காய் ஈந்தனர்?

தூக்கு கயிற்றினை மனமுவந்து புன் சிரிப்போடு ஏற்றிட்ட விடுதலை வேங்கைகள் தான் எத்துனை!!??

விடுதலைப் போரின் கலங்கரை விளக்காய் திகழ்ந்த பகத்சிங்கின் வீரத்தினை நாடு மறந்திட முடியுமா?

ஆங்கில துரையிடம் கப்பம் செலுத்த மறுத்து தூக்கு கயிற்றினை முத்தமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தினைத்தான் மறக்க முடியுமா?

பெண்கள் வீட்டுப் பதுமைகளாய் இருந்த காலத்தில் தன் துணைவரான முத்து வடுகநாதரின் மறைவிற்குப்பின் ஆங்கில அரசினை எதிர்க்க படைகொண்டு போரிட்டு வீர மங்கை வேலு நாச்சியாரை மறந்திடத் தான் இயலுமா?

இறக்கும் தருவாயிலும் கொடிதனை பிடித்து உயிர் நீத்த கொடி காத்த குமரனை மறக்கவும் மனம் தலைபடுமா?

தன் பொருள் முழுவதும் இழந்து கப்பல் ஓட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை,அவர்களின் தியாகத்தினை மறந்திடவும் முடியுமா?

எத்துனைத் தியாகச் சுடர்கள் இந்த சுத்ந்திர தீபத்திற்காக தங்களை திரியாக்கினர் என்பதை பட்டியலிட்டால் அதன் நீளம் தான் முடிந்திடுமா?

இப்படி அரும்பாடுபட்டு இரத்த துளிகள் கொண்டு செதுக்கபட்டதுதான் இன்று இருக்கின்ற சுதந்திர இந்தியா.

61 -ம் சுதந்திர தினத்தினை கொண்டாடுகின்ற இந்த வேளையில் கடந்து வந்த பாதையினை திரும்பிப் பார்த்தால் மணம் வீசிடும் ரோசா மலர்களும் உண்டு அதில் சுருக்கென தைத்திடும் முட்களும் உண்டு.

இன்று அறிவுத் துறையில் ,பொருளாதர துறையில் , தொழில் துறையில் வல்லரசுகளையும் சவால் விடும் அளவிற்கு வளர்ந்துள்ள இந்தியா முழுவதும்மாய் சுதந்திரம் அடைந்திட வில்லை.

என்ன தோழர்களே!! வியப்பாய் இருக்கின்றதா? சாதனைகளை பட்டியலிட்டுக் களித்திடும் இத் தருணத்தில் நம் நாட்டின் சோதனைகளைக்கு வித்திட்ட சில எதிர்மறை நிலைகளையும் நாம் எண்ணியேத் தீர வேண்டும்!!

61-ம் சுதந்திர தின விழா!!
ஆனால் வறுமையில் உழலும் பல கோடி மக்களுக்கு என்று விடுதலை?எண்ணியதுண்டா நம் நெஞ்சம்?

உலக மக்கள் தொகையில் இரண்டாம் நிலையில் இருக்கும் நாம் இன்றளவும் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு தங்கப் பதக்கம் பெற்றிடவும் போராட வேணிடிய நிலை ஏன்? சிந்தித்ததுண்டா?

உலகத்தில் பிறப்பால் உயர்வு தாழ்வினை புகுத்திடும் மதம் இருந்தென்ன பயன் என்று எண்ணியதுண்டா?

கல்விக்கும் கடவுள் உண்டு என பறைசாற்றிய நாட்டில் எழுத்தறிவு இல்லா மக்களின் எண்ணிக்கை தெரியுமா?

மூடப் பழக்கமும் கடவுளரின் கதைகளும் அவதாரங்களின் அணிவகுப்பு கொண்ட நாட்டினில் ஏன் விஞ்சான கண்டுப்பிடிப்புகள் குறைவு என எண்னியதுண்டா?

நாட்டினையும் , மொழியினையும் பெண்ணாய் தாயாய் கண்டு போற்றும் நிலையில் பெண்களின் விகிதம் ஆண்களை விட ஏன் குறைவு ? பாலியல் வன்முறைக்கு பலியாகும் பெண்கள் எத்துனைப்பேர்? குடுப்ப வன்முறையால் , வரதட்சனைக் கொடுமையால் கொள்ளப்படும் ; தற்கொலை செய்து கொள்ளும் மாதர்களின் எண்ணிக்கை தெரியுமா?

எதிர்கால இந்தியாவின் தூண்கள் என்று சத்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்களால் பெரிதும் விரும்பப்பட்ட குழந்தைகள் , உணவு விடுதிகளில் கட்டிட வேலைகளிலும் தங்கள் எதிர்காலத்தினை தொலைப்பது பற்றி தீவிரமாய் எண்ணியதுண்டா?

உலக வரலாற்றிலயே மதப் போருக்காகத்தான் மனித குருதி அதிகம் சிந்தப்பட்டிருக்கின்றது. அப்படிப்பட்ட அபின் உண்ட போதையினைத்தரும் மதத்தால் மக்கள் பிளவுபட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் மதக் கலவரங்கள் பெருகி மனித உயிர்களை கொன்று குவிக்கின்றதே இத்தகைய கேடு விளைவிக்கும் மதத்தினை பின்பற்றியே தீர வேண்டுமா என்று எண்ணியதுண்டா? எண்ணிப்பாருங்கள் மக்களே!!

சுதந்திர இந்தியாவின், புண்ணிய மண்ணின் , புதல்வர்களே கேளுங்கள்!!

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் புள்ளி விவரம் இது!!

2004-2005 ஆம் ஆண்டின் கணக்கேடுப்பின்படி மக்கள் தொகையில் 27.5% மக்கள் வறுமை கோட்டிற்கும் கீழ் வாழ்கின்றனர். கேட்கும் போதுபதறவில்லையா நெஞ்சம்?

எண்ணிப் பாருங்கள் ஒரு வேலை உணவும் இல்லாமல் உடுத்த நல்லதொரு கந்தையும் கூட இல்லாமல் தங்கிட இடம் இல்லாமல் வாழும் மக்கள் பலகோடி பேர்கள் இருந்திட அடுக்கடுக்காய் செல்வம் சில மனிதர்களிடம் மட்டும் கொட்டிக் கிடக்கின்றதே?

பச்சிளம் குழந்தைகள் பாலுக்கும் கதறி அழும் தேசத்தில் தான் குடம்குடமாய் பால் அபிடேகங்கள்!! எண்ணிப்பாருங்கள் மக்களே! மூடத்தனத்தினை கெஞ்சியும் , கொஞ்சியும் கூறினாலும் இந்த உளுத்தர்கள் திருந்திட போவதில்லை .

இடித்துரைத்துக் கேட்டால் மனம் புண்படுகிறது என்றே பண் படுவர். ஆனால் பசியால் புண்ணாகிப்போன வயிற்றினைப் பற்றிச் சிறுதும் கவலை அற்ற கனவான்கள்.

திறமை பேசிடும் சில ஆதிக்க கூட்டத்தினரே விளையாட்டுத் துறையில் குறிப்பிட்ட விளையாட்டிற்கு மட்டும் பணம் கொட்டுகின்றது. உண்டு கொழுத்தே விளையாட்டில் கோட்டை விடுகின்றனர் சில சோம்பேறிகள். இந்தியா முழுவதும் சாதிக்க துடிக்கும் கருப்பு வைரங்கள் உள்ளனவே, அவர்களுக்கு முறையான வாய்ப்பு வழங்கப்படுகிறதா?

அல்லது அனைத்து விளையாட்டிற்கும் தான் முறையாக வசதி செய்து தரப்படுகின்றதா? இங்கும் ஆதிக்க வர்கத்தில் இருக்கும் சிலருக்குத்தனே வாய்ப்பு ஏற்படுகின்றது. மறுக்க முடியமா நடுநிலையாளர்களே?

உலகத்தில் ஏற்றத் தாழ்வுகள் எல்லா நாட்டிலும் உண்டு. அங்கே பணத்தால் , நிறத்தால் மனிதனை பிரித்தான். ஆனால் அக் கொடுமையினை விட கொடுமை பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பறைசாற்றிக் கொண்டு எவன் எக்கேடு கெட்டால் என்ன? தங்களின் ஆதிக்கமும் , சாதிய தன்மையும் பாதுகாத்திடவே ஊளையிடும் குள்ள நரிச் செயல்களை செய்திடும் கூட்டத்தினரை உலவ விட்டு நாடு சுதந்திரம் அடைந்துவிட்டது எனவே பறைசாற்றுவது எவ்வளவு மூடத்தனம்? அறிவு நாணயம்கொண்டு சிந்தித்தோமா?

மக்கள் தொகையில் சரிபாதியாய் உலவிடும் பெண்களை இழிவாய் நடத்திடலும், எத்துனை பெரிய பதவியல் இருந்திட்டாலும் பெண் தானே என்று இளக்காரமாய் பார்த்திடும் ஆணவப் பார்வையும் , கருவில் தோன்றிடும் போதே பெண் சிசு எனில் அழித்திட்டலும் சுதந்திர நாட்டின் நல்ல செயல்களோ ? எண்ணுங்கள் தோழர்களே!!

கருத்தினைக் கொண்டு எண்ணுங்கள்!! இத்துணை குறைகளும் களையப்படும் நாள் வருமா?

"இரவினில் சுதந்திரம் வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை"

என்றான் ஒரு கவிஞன். சுதந்திரம் கிடைத்தபோது அது ஒரு கருப்பு தினம் என்றார் தந்தை பெரியார்.

அய்யகோ!! என்று பதறினர் மக்கள். சுதந்திரம் எப்படி கருப்பு தினமாகும் என்றே வினவினார் அறிஞர் அண்ணாவும்.

இதோ இன்று புரிகின்றதா ஏன் சுதந்திரம் கருப்பு தினம் என்று ஐயா கூறினார் என்று.?

சுதந்திரத் தினத்தன்றும் சுதந்திரமாய் உலவிடமுடியாமல் தீவிரவாதம் நாட்டின் பக்கவாதமாய் உதயமாகி இருப்பதை கண்டீர்களா??

சாதனைகளைப் பற்றி கூறிக் கூறிக் களித்திடுவதில் மட்டும் பயனில்லை. சோதனைகளை கலைத்திட முன் வர வேண்டும். அன்னியர் ஆட்சியில் இருந்ததை விட சமூக நிலையில் கீழானவர்களாக தான் இன்று இருக்கின்றோம்.

கொடுமை என்னவெனில் நம் மக்களின் கீழ் ஆளப்படும் நிலையில் இப்படி இருக்கின்றோம்; மக்களாட்சியில் இந்த அவல நிலை.

விடுதலை பெற்ற இந்தியாவில் தான் 1948 -ல் மகாத்மா அவர்கள் ஒரு இந்து மதவெறியனால் சுடப்பட்டார்கள்!!

1948 தன்னை திருப்பிக்கொண்டபோது திருத்திக்கொள்ளவில்லை. மாறாக 1984 - ல் ஒரு சீக்கிய மதவெறியன் சுட்ட குண்டுகளுக்கு பலியானார் நாட்டின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள்!!

மதத்தின் இந்த அவல நிலை இன்றளவும் தொடர்கின்ற காரணத்தால் தான் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஜம்மு-காஷ்மீர் பிரச்சனை!!

இந்தியாவின் ஒற்றுமையை காண்பிக்க ஒவ்வொரு முறையும் கார்கில் போர் தான் வர முடியுமா? அப்படி ஒரு நிலை நாகரிக வளர்ச்சி பெற்ற சமுதாயத்தில் எவ்வளவு வெட்ககேடானது என்று எண்ணிப்பார்க்க வேண்டும்!! என்றுமே ஒற்றுமையாக வாழ்வது தான் அறிவார்ந்த சமுதாயாத்தின் குறிக்கோளாக இருக்க முடியும்!!

அரசியல்வாதிகளைக் குறைகூறிப் பயனில்லை . அரசியல் சாக்கடை . அங்கே புழுக்கள் உலவிடுமே தவிர நல்ல தலைவர்கள் இன்று உதிப்பதில்லை.

அதில் உழலும் தலைவர்கள் பலர் கொள்கையினை இழந்தே சிகரத்தினை எட்டிப் பிடிப்பதாய் நினைத்து வாழ்கின்றனர்!!.

அரசியலே வேண்டாம் என்று தான் வகித்த பதவிகளையும் உதறித் தள்ளி விட்டு ஒரு புரட்சி மிகு சமூக மாற்றத்தினை உண்டாக்கிய பெருமை தந்தை பெரியாரையே சாரும்.

அதே போன்று விடுதலைக்கு பின் தனக்கு கிடைக்கவிருந்த பிரதமர் பதவியை வேண்டாம் என்று உதறிய பெருமை மகாத்மா அவர்களையே சாரும்!!

கல்வி அனைவர்க்கும் சமம் என்றே குலக்கல்வி திட்டத்தினை ஒழித்த பெருமை காமராசர் அவர்களையே சாரும்!!

அப்படிப்பட்ட கண்ணியம் நிறைந்த தலைவர்களை இன்று காண்பது அரிது!!

அதே போல் தான் உண்மை விடுதலை நாம் பெறுவது என்பதும் இத்தகு கொடுமைகள் இருக்கின்றவரை அரிது!!

அனைவரும் சமம் !! சாதி, மதம் , கடவுள் இவை எதுவுமே மானுடப் பற்றின் முன் பெரிதில்லை. மானுட அன்பு, மனித நேயம் மட்டுமே உன்னதமானது என்ற நினைவு என்று மக்களின் நெஞ்சங்களில் ஊன்றுகின்றதோ அன்று தான் தோழர்களே உண்மைச் சுதந்திரக் காற்றினை சுவாசித்தவர்கள் ஆவோம்!!

விடுதலை முரசினை அன்று விண் அதிர ஒலித்திடுவோம்!!

உனை வாசிக்கவில்லை - சுவாசிக்கின்றோம்!!

உணர்ச்சியற்று
மானமிழந்து
மரக்கட்டையாய்
வாழ்ந்த மந்தைக்கூட்டத்தை
நீங்களும் மனிதர்கள்தான்
என்ற உணர்வினையும்
மானமும் அறிவும்
பகுத்தறியும் தன்மையும்
ஊட்டி
கூன் விழுந்த
முதுகினை நேராய்
நிமிர்த்தி
தாழ்ந்த தலையினை
தலைநிமிரச் செய்த
ஈரோட்டுச் பகுத்தறிவுச் சூரியனே!!
உந்தன் கருப்பு கதிர்கள்
எங்களின் இழிவினை பொசுக்கியது
உந்தன் எழுச்சிக்குரல்
எங்களின் இனத்தினை காத்தது
வாழ்வின் வெளிச்சத்தினை
எங்களுக்கு காட்டிவிட்டாய் -இனி
அறிவினை தடுப்போரின்
இழிவினை சுமத்துவோரின்--பிறவி
பேதத்தை போற்றுவோரின் கொட்டத்தை
உன் அரிமா கூட்டம் அடக்கும்!!

இறுதி மூச்சு உள்ள வரை
இறுதிச் சொட்டு குருதி
உள்ள வரை
ஆதிக்கத்தினால் ஆர்பரிக்கும்
ஆதிக்க நரிகளை
உன் பகுத்தறிவுச்
சேனை வீழ்த்தும்!!

இது உணர்ச்சியால்
கொப்பளிக்கும் வார்த்தைகள்
அல்ல!!- இது
நன்றியின் வெளிப்பாடு

அய்யாவே உனை வாசிக்கவில்லை -நாங்கள்
சுவாசிக்கின்றோம்!!

உடன்படோம்!!

வீட்டை இழந்தோம்
நாட்டை இழந்தோம்
காட்டினை அடைந்தோம்
உயிரிழப்பினும்
உரிமை இழக்க
உடன்படோம்!!