நாத்திகத்தை ஏற்றுப்பார்!!
தேவையற்ற பண்டிகைச்
செலவு குறைத்திட்டே
சேமிப்பு கொண்டே
வாழ்வில் மகிழ்ச்சி மிளிர்ந்திட!!
நாத்திகத்தை ஏற்றுப்பார்!!
ஆயிரக் கணக்கில்
ஆயுதம் ஏந்திய
கடவுள் எண்ணிக்கையில்;
எதையாவது வழிபட
விட்டுத் தொலைத்தால்
நேர்ந்திடுமே அவலம்
என்றே எண்ணி எண்ணியே
பொருளினையும் நேரத்தினையும்
வீணாக்கிடும் இவற்றை
விட்டோழித்து ஆக்கப் பணியில்
புத்தியினைச் செலுத்தியே
வாழ்வில் வளம் பெறலாம்,
நாத்திகத்தை ஏற்றுப்பார்!!
என் கடவுள் சிறந்தது
உன் கடவுள் சிறியது
எனவே போரிடும்
மக்களே கூட
ஒரு நிலையினில் நாத்திகர்தான்!!
நீ கடவுள் இல்லை
எனச் செப்பியே
மனிதம் வளர்த்திட
பாடுபட்டே மனிதநேயம்
காத்திட நாத்திகத்தை ஏற்றுப்பார்!!
அறிவிற்கு பொருந்தா
கடவுளர் பிறப்பும்
அவற்றின் ஒழுக்கமற்ற நடப்பும்
உன் மூளைதனில் ஏற்றியே
உனை மூலையில்
அமர்ந்திடச் செய்வர்!! அதனை
தகர்த்தே பகுத்தறிவினை ஏற்றே
பண்டைத் தமிழ்
மறவரின் வாழ்வினை
அறிந்தே செயல்பட
பண்பாட்டு
படையெடுப்பினைப் புரிந்திட
நாத்திகத்தை ஏற்றுப்பார்!!
வாழ்வில் தோற்பின்
விதி எனவே மூலையில்
முடங்கிடாது தோற்ற
காரணம் அறிந்தே
விதி தனை
மதி கொண்டு
வென்றிட
வாழ்வின் போராட்டம் புரிந்திட
தன்னம்பிக்கையின் தத்துவத்தினில்
நம்பிக்கை வந்திட
நாத்திகத்தை ஏற்றுப்பார்!!
எல்லாம் அவன் செயல் என்றே
மக்கள் தொகை பெருக்கிட்டார்;
குடும்ப கட்டுப்பாடே
நாட்டினை வளமாக்கிடும்
என அறிந்திட
நாத்திகத்தை ஏற்றுப்பார்!!
இயற்கை சீற்றத்திலும்
தீவிரவாதத்திலும் சிக்குண்டு
மனிதன் அழிவுறும் நொடியில்
வாரா இறைவன்
வருவான் வருவான்
என்றே எதிர்பார்த்தே
அவன் விமானம் கொண்டே
வருவான் சொர்க்கம் சென்றிட
என்றே பூசைகளும் பலிகளும்
நடத்தியே வாழும் காலம்
அறிவு தொலைத்து
மனிதம் மறந்து
இறந்தபின் மோட்சம்
செல்ல வேண்டி வேண்டி
இறப்பதை விட
மண்ணில் வாழ்ந்திடும் நேரம்
மண்ணின் உயிர்களை
நேசித்தே வாழ்ந்திடவும்
இறந்தால் உடல்
மண்ணோடு மண்ணாக
மக்கிப்போகும்
உயிரோ தனியே
எங்கும் உலவிடாது என்றே
உண்ர்ந்திட
நாத்திகத்தை ஏற்றுப்பார்!!
சுகவாழ்வு வாழ்ந்திட
சுயமரியாதை பெற்றிட
தன்னலம் மறந்திட
மனிதம் தழைத்திட
நாத்திகத்தை ஏற்றுப்பார்!!