Sunday, August 3, 2008

அவர்களின் கேள்வி??

இவர்களுக்கு கதிரோன்
மறையும் நேரம்தான்
காலை உதயம்!!
புதிராய் உளதா?
இவர்கள் வாழ்வும் புதிர்தான்!!
கதிர் அறியா உதிர்ந்த மலர்கள்
இவர்கள்!!
நல்ல உள்ளங்கள்
கண்டதில்லை அவர்கள்!!
சதைப்பிண்டந்தனை ருசித்திடும்
வெறிநாய்கள்தான் உலவிடும்
அவர்கள் உலகில்!!

கண்களில் மையிட்டிருப்பினும்
சோகம் இழையோடும்!!
உதட்டில் புன்சிரிப்பு இருப்பினும்
அதிலும் ஒரு வெறுமை
என்றுமே தங்கிடும்!!
திக்கறியா காட்டில்
உலவிடும் குழந்தையின்
மனம் போல்
இவ்வுலகில்,
அவர்கள் வாழ்வு!!

விலை கொடுத்து எதையும்
வாங்கிடும் இவ்வுலகில்
அவர்கள் சூழ்நிலையால்
விலை மாதர்கள்!!

யார் அறிவர் அவர்களின்
மனப்போராட்டம்?

பிற பெண்கள் போல்
வாழ்ந்திடத்தான் ஏக்கம்-ஆனால்
ஏக்கம் என்றுமே கனவாய்!!

தாயின் மருத்துவ செலவு
தம்பியின் வேலை
தங்கையின் கல்வி
குழந்தையின் பசி

இவற்றிக்கு மற்றவர்
உடற்பசி தீர்த்தனள்
என்றா கூறிடும் இவ்வுலகம்?

வேசி!!
தாசி!!

பணத்திற்கு உடலை
விற்கும் மானமற்ற பிண்டம்!!
கைகாரி!!
இவளும் பெண்தானா?
மயக்குகிறாள் பார் பார்வையால்
வெட்கம் தெரியா நங்கை!!

இவல் கால் பட்டால்
பட்ட இடம் துலங்கா-என்று
பட்டம் தான் தந்திடும்
பரந்த இவ்வுலகம்!!

இவர்களின் வேதனைச்சிரிப்பை
காமத்தின் தூண்டுகோலாய்
உலகம் பகன்றிடும்!!

போகட்டும்!!
உலகம் அப்படித்தான்!!
என்று எண்ணியே தேறுதல்
அடைந்திடினும்,
இவர்கள் மனதினில்
எப்பொழுதும்
ஒரு வினா உண்டு!!

எங்களை கேலிப்பேசிடும்
உலகமே,
எம்மைப்பற்றி ஒரு செய்தி
கிடைப்பினும்
விளம்பரம் தேடிடும்
கொள்கை அற்ற
செய்தித்தாள்களே!!
எம்மை உலகினர் பார்க்க
சிறுமை படுத்தும்
ஊடகங்களே!!
ஒரு கேள்வி உங்களிடம்!!

சூழ்நிலையால்
உடலை விற்கும்
பெண் வேசி எனின்
தேடி வரும் ஆண்
சுத்த வீரனோ??

No comments: