Sunday, August 3, 2008

விசித்திர கவிதை!!

விசித்திர பழக்கங்கள்
விளக்கிட கேட்க,
இதோ என்
விசித்திர கவிதை!!

பழக்கம் என்பதில்
ஒழுக்கம் இல்லையேல்
கழுத்து போயினும்
கைகொள வேண்டா
என்றே பகன்றார்
புதுவையின் புரட்சிகவி!!

சில பழக்கங்கள்
பழகிவிடுவதால்
வழக்கமாகின்றன;
சில பழக்கங்கள்
வழக்கமாய்
இல்லா காரணத்தால்
விசித்திரமாகின்றன!!

மண்ணில் தோன்றிடும்
உயிர் அனைத்திற்கும்
விசித்திரம் உண்டு;
விசித்திரங்கள் இல்லா
வாழ்வு வறட்சியால்
வாடிடும்
பாலைவனமாம்!!

பாலைவனமாய்
வாழ்வினை
பாழாக்கிடா
என் விசித்திர
பண்பினையே கேளுங்கள்!!

விசித்திர ஆசைகள்
விளைந்திடும் என்
மனதே விசித்திரம்!!

தோன்றிய ஆசைகளும்
நிலையாய் நிலைத்திடா;
கதிரோன் கதிரில்
ஆவியாகிடும் நீராய்
ஆசைகளும் !
மற்றொமொரு ஆசையை
அடைந்திடும் பொருட்டு
மனம் தயார் ஆகிடும்
விரைவில்!!

விசித்திர ஆசைகள் பல!!
அனைத்து கலையினையும்
அறிந்து கொள்ள ஆசை!!
அறிவியலை புரிந்துகொள்ள ஆசை!!
ஒன்றினை அறிந்த பின்
கவி போலவே மனம்
தாவியே மற்ற விடையத்தில்
சென்றிடும் விசித்திர மனம்
என் மனம்!!

அறிந்து கொள்வதில்
மாற்றம் வேண்டும்
உள்ளம்,
உணவில் மாற்றம்
விரும்பா விசித்திர உள்ளம்
புதிய உணவு சுவைத்திட
பயம் ஏற்படும் உள்ளம்!!

எப்பொழுதும்
என் தாய்தமிழ்நாட்டின்
உணவு மட்டுமே
விரும்பும் உள்ளம்!!

சுட சுட ஊண் உணவு
இருப்பினும் பழைய
சோற்றில் நீரும்
மீனின் குழம்பும்
கூழும் அதோடு
சுவை கூட்டும்
கருவாட்டின் குழம்பும்
முருங்கையின் பொறியலும்
தினம் உண்பினும்
சலிப்பு தட்டா
நாவின் விசித்திர பண்பு!!

எப்பொழுதும் மகிழ்ச்சியாய்
இருப்பினும் காரணம்
இல்லா வெறுமை கொள்ளும்
மனதின் விசித்திர பண்பு!!

எங்கு சென்றிடினும்
புத்தகங்கள் அள்ளிக்
கொணர்ந்திடும் என்
ஆர்வப் பண்பு!!

புத்தக கண்காட்சி எனின்
மனம் பட்டாம்பூச்சியாய் பறந்திடும்
மனதோடு சேர்த்து பணமும்தான்!!

நான் நாத்திகன்
என பரைசாற்றிடும் நேரம்
மனதில் எற்படும் மகிழ்ச்சி
என் தோழர்களுக்கு விசித்திரம்!!

இறுதியாய் ,

இறுதி மூச்சின் சுவடு
வெளியேறும் போதும்
பெரியாரின் தொண்டராய்
அவர் கொள்கை
பரப்பிட வேண்டும்
என்று தூங்கும் நேரமும்
எனைத் தூங்கவிடா
என் வாழ்வின் இலட்சிய
பண்பு பலருக்கு
விசித்திரமாய்!!

No comments: