மரணமே உனைக் கண்டு
நடுநடுங்கும் கோழைப் பரம்பரை
நாங்கள் என நினைத்தாயோ?
பிறந்த குழந்தை இறந்து பிறப்பினும்
நோயால் மறிப்பினும்
முதுமை கொண்டு இறப்பினும்
உடல்தனைக் கீறியே புதைத்திடும்
வீரக் கூட்டத்தின் சிங்கங்கள் நாங்கள்!!
வேல் குத்தியே இறப்பினும்
காயம் மார்பிலா?முதுகிலா?
என்றே கழறும்
வீர மங்கையர் எங்கள் மங்கையர்!!
பெற்ற மகன் போர்க்களத்தில்
முதுகில் காயம் பட்டு இறந்தனன்
எனின் அவன் பால் குடித்திட்ட
மார்பினை அறுத்தெறிவேன்
என்றே முழக்கமிட்ட 'தாயின்'
வீரக்கொழுந்துகள் நாங்கள்!!
அன்று தான் மணம் முடித்தனன்
எனினும் போர் என முரசறைந்தால்
மரணம் உறுதி என அறிந்தும்
நாட்டினைக் காக்கவே புறப்படும்
மறத்தமிழர் எங்கள் தமிழர்!!
தந்தையையும் துணையினையும்
போரில் இழப்பினும்
பால் மணம் மாறா
மழலைச் செல்வம்
அவனை பகைவரினை
வீழ்த்திட வாழ்த்தியே அனுப்பிடும்
வீரத்தமிழச்சியின் குடியிலே பிறந்த
எங்களுக்கா உனைக் கண்டு
பீதியும் பயமும்?
மண்ணில் பிறக்கும் உயிர்கள் அனைத்தும்
மரணக் குழியில் வீழ்ந்திடும் ஓர்நாள்
என்றே தெளிவாய் தெரிந்த காரணத்தால்
உனைக்கண்டு அஞ்சிட எங்களுக்கு நேரமில்லை!!
வாழும் காலங்கள்
மனிதத்தோடு வாழ்ந்து
தமிழினை உயிருக்கு
நிகராய் காத்து
தாய் தமிழ் நாட்டின் பெருமையை
அகிலம் அகல பரப்பிடும் அவா எங்களின் அவா!!
அப்பணியின் இடையினில்
மரணம் வரினும்
மகிழ்ச்சியாய் ஏற்றிடும்
வீர உள்ளம் எங்கள் உள்ளம்!!
பத்து முறை வாராது பாடை
செத்து மடிவது ஒரு முறை தான்
சிரித்துக் கொண்டே செருக்களம்
வாடா என்ற உணர்ச்சி
வரிகள் பதிந்திட்ட நெஞ்சம் எங்கள் நெஞ்சம்!!
எச்சரிக்கை மரணமே எச்சரிக்கை
எங்களைத் தழுவிடும் நேரம்
வருந்தப்போவது நீதான்!!
உனைத் தழுவிடும் எங்கள் முகமோ
மறையா புன்னகையோடு!!
No comments:
Post a Comment