Sunday, August 3, 2008

உதிர்ந்த மலரின் வினா?

இளம் சூட்டு
நீர்தனில் குளிப்பாட்டி
கண்ணுக்கு மையிட்டு
தாலாட்டுப் பாடி
உச்சி முகர்ந்து
முத்தமிட்ட
மூதாட்டியின் விழிநீர்
என் நெற்றியை
நனைத்திடவே
ஏன் இந்த விழி நீர்
என வினா எழுப்பிட
முடியா குழந்தையாய்
நான் இருந்த காரணத்தால்
'
வீல்' என்றே அலறினேன்!!

கண்ணே அஞ்சுகமே
கண்மணியே அழாதே
இனி துக்கமும் உனக்கில்ல
அழுகையும் வாராது
செல்லமே பெண்ணாக
பூமிதனில் நீ பிறந்திட்ட
காரணத்தால் கல்லறையில்
நிம்மதியாய் உறங்கிடு
பெண்ணாய் வாழ்ந்து
போராடி வாதாடி
வாயாடி எனப்பேர்
பெறுவதை விட
பருவ மங்கையாய்
பலரின் பார்வைக்கும்
பேச்சுக்கும் இரையாவதைவிட
துணைவியாய் வாழ்ந்து
துரும்பாய் மிதிக்க படுவதைவிட
படிப்பின்றி அடுப்படியிலே
காலமும் எரிவதைவிட
வரதட்சணை கொடுமையால்
வதைபடுவதை விட
கரும்பே கனியமுதே
கள்ளிப் பாலினை நீ
அருந்தி கலவரமின்றி
கண்மூடிடு
கல்லறை தொட்டிலில்!!
என்றே கிழவியின்
தாலாட்டை கேட்டு
அதிந்து போனது என்
பிஞ்சு மனம்!!
12 -
ஆம் நூற்றாண்டா இது?
21 -
ஆம் நூற்றாண்டாயிற்றே
அதிலும் பெண்னைப் போற்றிடும்
அழகுத் தமிழகத்திலா
பெண் குழந்தை எனக்கு
குடிக்க கள்ளிப்பாலும்,
தவழும் முன்
கல்லறைத்தூக்கமும்?
முதல் பெண் மருத்துவர்
வந்த தமிழ்நாட்டிலா
பெண் சிசு பிறந்ததும்
மரணக்குழி?
வீரமங்கைகள் பிறந்த
நாட்டிலா விதை
நான் முளைக்கும்
முன்னரே அறுவடை?
என்னே எம் தாய் திருநாட்டின்
அறிவீனம்?
எங்கே எம் நாட்டின்
தமிழறிந்த அன்னைகள்?
பெண்கள் நாட்டின்
கண்கள் என்றே
பகர்ந்திட்ட கனவான்கள்
எங்கே ஒழிந்து போனார்கள்?
அய்யோ என் மரண ஓலம்
எனை பெற்ற தாயே உனக்கும்
கேட்டிடவில்லையா?
என் உயிர்தனைக் காப்பாற்றிட
எவருமில்லையா?
பறவையிலும்
விலங்கிலும்
பெண்தனை வேண்டிடும்
எம் நாட்டின்
மறவர் கூட்டமே
மானுடதில் மட்டும்
உயிர் சுமந்திடும்
பெண் சுமையோ?
மனித சங்கிலி
தொடர தன்
கருப்பைதனை அளித்திடும்
கனிமலர் பெண் சுமையோ?
சுமை என்றே
எங்களை பூமிக்குள்
புதைத்திடும் மூடர்களே-பின்
உங்களை சுமக்க யார் இருப்பர்?
என கேட்டிடத்தான் நினைதேன்
முடியவில்லை
கல்லறையில் நித்திரை கொள்ள
என் தளிர் உயிர்
தயாராகிக்கொண்டிருந்தது!!
இருட்டறையில் உள்ள
சமூகமே என் கல்லறை
பூக்களும் கண்ணீர் சிந்தும்!!
உங்களின் மூடத்தனத்தால்,
அந்த பூக்களின் வாசத்திலும்
பால் மணம் வீசிடும்
மறவாதீர்!!

No comments: