அவள் அவனின் வருகைக்காய்
ஆவலுடன் காத்திருந்தாள்!!
மல்லிகை மஞ்சத்தில் அல்ல,
மரணக்கட்டிலில் காத்திருந்தாள்
கல்லறை தொட்டிலில் தூங்குமுன்-தன்
இல்லற வாழ்வினில் இணைந்திட்டே
இன்பம் சேர்த்திட்ட இணைதனைக்
காணவே உயிர்தனைக் காத்திருந்தாள்!!
தாயின் மரணப்படுக்கையிலும்
தந்தை வரவில்லையே
எனக் கொதித்தது
பிள்ளைகளின் மனம்!!
நினைவுதெரிந்த நாள்முதலாய்
கட்டுப்பாட்டின் பிரதிநிதியாய்
கடமைதனைச் செவ்வனே
செய்திடும் செயல்வீரராய்
கண்ணியம் பிறழா
மானிடராய் வாழ்ந்த
தந்தையின் அருகில்
நெருங்கியதும் இல்லை
பிள்ளைகள்!!!
அவர்களைப் பொருத்தவரையில்
அவர் பாசம் அறியா
பாலைவனக் காட்டுநரி!!
தாயின் அரவணைப்பில்
மட்டுமே இளைப்பாறி
அன்பினைத் தெரிந்தவர்கள்!!
தந்தையின் அன்பினை
தாய் பலமுறை புரிய
வைத்திட முயன்று
தோற்றுப்போனாள்!!
அவன் பலநேரங்களில்
பிள்ளைகள் தன்னை
எதிரிபோல் எதிர்த்து
விலகுவது கண்டு
மனம் குமுறும்போதெல்லாம்
ஆறுதல் கூறிடும் தாய் அவள்!!
இப்படியும் கல்நெஞ்சம்
உண்டோ?
என்ன மனிதர்?
என பிள்ளைகள்
தங்களுக்குளாய் தர்க்கம்
நடத்திக்கொண்டிருக்கையில்
அ....ம்....
என்ற சத்தம்
அவர்களை அமைதியாக்கியது!!
பாசத்தின் ஊற்றாய்
குடும்பத்தின் தலைவியாய்
அன்பின் அடைக்கலமாய்
பம்பரம் போன்று சுழன்ற
தாயின் உயிர்
மரணச் சூறாவளியில்
சிக்கிப் பிரிந்தது!!
அவனோ
அவள் உயிரில்லா உடலினைக்
காண சகியாமல்
வெகு தொலைவில்
மௌனமாய் பிணமாகிக்கொண்டிருந்தான்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment